சமீபத்தில் துபாயை தலைமையிடமாக கொண்டு இயங்கும் எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் A380 விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்த நிலையில், அந்த காட்சிகள் சித்தரிக்கப்பட்டவை என்றும், பகிரப்படும் தகவல் பொய்யானது என்றும் விமான நிறுவனத்தின் தரப்பில் இன்று சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விமான நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “வீடியோவை அகற்ற பல்வேறு சமூக ஊடக தளங்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். தவறான மற்றும் ஆபத்தான தகவல்கள் பரவுவதைத் தவிர்க்க, இது டிஜிட்டல் முறையில் போலியாக சித்தரிக்கப்பட்ட காட்சிகள் என்பதை தெளிவுபடுத்துகிறோம்” என்று கூறியுள்ளது.
வீடியோ எப்போது பரப்பப்பட்டது அல்லது எந்த தளங்களில் பரவியது என்பதைக் குறிப்பிடாத விமான நிறுவனம், அதன் செயல்பாடுகளில் பாதுகாப்பு முக்கியமானது என்பதை வலியுறுத்தியதுடன் எப்போதும் உத்தியோகபூர்வ ஆதாரங்களில் இருந்து வரும் தகவல்களை நம்புமாறு பார்வையாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், உள்ளடக்க மறுஆய்வு கோரிக்கைகளுக்கான சமூக ஊடக தளங்களில் இருந்து வரும் பதில்கள் போதுமான அளவு விரைவாக இல்லை என்பதையும் எமிரேட்ஸ் விமான நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜனவரி 2025 நிலவரப்படி, எமிரேட்ஸ் நிறுவனம் சுமார் 116 ஏர்பஸ் ஏ380 விமானங்களை இயக்குகிறது. இது உலகளவில் இந்த மாடலின் மிகப்பெரிய ஆபரேட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel