ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று நடைபெற்ற அபுதாபியின் பிக் டிக்கெட் மாதாந்திர ரேஃபிள் டிராவில் பஹ்ரைனைச் சேர்ந்த இந்திய வெளிநாட்டவர் ஒருவர் 30 மில்லியன் திர்ஹம்ஸ் (ரூ.70 கோடிக்கும் மேல்) கிராண்ட் பரிசை வென்றதன் மூலம் ஒரே இரவில் கோடீஸ்வரராகியுள்ளார்.
இது குறித்து நேற்று பிக் டிக்கெட் வெளியிட்ட அறிவிப்பில் இந்த கிராண்ட் பரிசை வென்ற வெற்றியாளர், இந்தியாவில் கேரளாவைச் சேர்ந்த மனு மோகனன் என்பது தெரியவந்துள்ளது. இவர் டிசம்பர் 26 அன்று ஆன்லைனில் வாங்கிய டிக்கெட் எண் 535948 மூலம் கிராண்ட் பரிசைப் பெற்றுள்ளார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அவர் வாங்கிய டிக்கெட்டிற்கு இலவசமாக கிடைத்த டிக்கெட்டுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.
கடந்த ஏழு ஆண்டுகளாக பஹ்ரைனில் ஆம்புலன்ஸ் செவிலியராக பணிபுரிந்து வரும் மோகனன், குடும்பத்தினரை இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல விமான டிக்கெட்டை எடுக்க முடியாமல் பொருளாதார நெருக்கடியில் தவித்து வந்த நிலையில், பரிசுத் தொகை கிடைத்ததால் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக டிராவில் பங்கேற்று வருவதாகவும், பரிசுத் தொகையை டிக்கெட் வாங்குவதற்கு பங்களித்த 16 நபர்களுடன் பகிர்ந்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார். அபுதாபி பிக்டிக்கெட்டில் பங்கேற்பாளர்கள் அவர்கள் வாங்கும் ஒவ்வொரு இரண்டு பிக்டிக்கெட் கூப்பன்களுக்கும் ஒரு இலவச டிக்கெட்டைப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel