துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தால் (RTA) சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பஸ் பூலிங் சேவைக்கு குடியிருப்பாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிவிப்பின் படி, இந்த சேவையை அறிமுகப்படுத்திய முதல் 10 நாட்களுக்குள் 500க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தியுள்ளதாக தகவல் கூறப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 2024 இல் தொடங்கப்பட்ட பஸ் பூலிங் சேவை, இடைப்பட்ட பஸ் நிறுத்தங்களைத் தவிர்க்கவும், குடியிருப்பாளர்களுக்கு பணத்தை மிச்சப்படுத்தவும் உதவுகிறது. இந்த பஸ் பூலிங் முன்முயற்சியானது ஸ்மார்ட் அப்ளிகேஷன்களில் முன்பதிவு அமைப்பு மூலம் பயணிகளை இந்த மினிபஸ் பயணங்களை பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. குறிப்பாக, இ-ஹெய்ல் டாக்ஸி சேவைகளை விட இந்த சேவையின் கட்டணம் சுமார் 20 முதல் 30 சதவீதம் குறைவாக உள்ளது.
இதன் காரணமாக, அடிக்கடி பயணம் செய்யும் பெரும்பாலான குடியிருப்பாளர்கள் இந்த சேவையைத் தேர்வு செய்கின்றனர். இது மலிவு விலையில் வசதியான பயண அனுபவத்தைக் கொடுப்பதாகவும் தினசரி பயனர்கள் தெரிவித்துள்ளனர். கராமாவில் வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர் கூறுகையில் “RTA பஸ்ஸை விட இது சிறந்தது, ஏனென்றால் பொதுப் பேருந்தைப் பிடிக்க சரியான நேரத்தில் பஸ் நிறுத்தத்திற்கு வரவில்லை என்றால், அடுத்த பஸ்ஸுக்காக காத்திருக்க வேண்டும் மற்றும் இடையில் பல நிறுத்தங்கள் உள்ளன. ஆனால் இந்த சேவை 15 முதல் 20 நிமிடங்களில் எனது வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு வந்து சேரும். இது மிகவும் சிக்கனமானது” என்று தெரிவித்துள்ளார்.
RTA செய்தித் தொடர்பாளர் இது குறித்து கூறுகையில், இ-ஹெய்ல் டாக்ஸி சேவைகளை விட இந்த சேவையின் கட்டணம் சுமார் 20 முதல் 30 சதவீதம் குறைவாக உள்ளது என தெரிவித்துள்ளார். எனவே இதன் பயன்பாடு துபாய் குடியருப்பாளர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எப்படி பயன்படுத்துவது?
சிட்டிலிங்க் ஷட்டில் (Citylink Shuttle), டிரிவன்பஸ் (drivenbus) மற்றும் ஃப்ளக்ஸ் டெய்லி (fluxx daily) ஆகிய மூன்று நிறுவனங்களால் இயக்கப்படும் இந்தச் சேவையை அவற்றின் எந்த ஆப்ஸ் மூலமாகவும் குடியிருப்பாளர்கள் முன்பதிவு செய்யலாம். ஒவ்வொரு நிறுவனமும் வெவ்வேறு பகுதிகளைக் கையாளுகின்றன.
இந்த பேருந்துகளில் ஒரே நேரத்தில் 10-12 பேர் அமர முடியும் மற்றும் டாக்சிகளைப் போலவே இந்த பேருந்துகளுக்கும் நிலையான வழிகள் இல்லை. மேலும் பயணத்தைத் தொடரும் முன் பேருந்து நிரம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை, அதாவது பேருந்தில் ஒரு பயணி மட்டுமே இருந்தபோதிலும் அவர்கள் விரும்பிய இடத்திற்கு அவர்களை இறக்கி விடும்.
மூன்று நிறுவனங்களில் இருந்து மொத்தம் 60 பேருந்துகள் இந்த சேவையை வழங்குகின்றன. முதலில் பிசினஸ் பே, துபாய் மால், மிர்டிஃப் மற்றும் துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி போன்ற மத்திய வணிக மாவட்டங்களுடன் தேராவை இணைக்கும் முயற்சி, மெதுவாக மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இந்த சேவைக்கான தேவையைப் பொறுத்து எண்ணிக்கை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சேவை பகுதிகள் படிப்படியாக அதிகரிக்கப்படும் எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel