துபாயில் முன்னதாக சாலிக் நிறுவனம் அறிவித்தபடி, இன்று முதல் (ஜனவரி 31) துபாயில் புதிய மாறுபட்ட சாலை டோல் கட்டண முறை நடைமுறைக்கு வந்துள்ளது. புதிய முறை எமிரேட்டில் உள்ள அனைத்து சாலிக் வாயில்களுக்கும் பொருந்தும் என்று சாலிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த முயற்சி போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்துவதற்கும் அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் மிகவும் திறமையான சாலை பயன்பாட்டு அனுபவத்தை வழங்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதையும் நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது.
RTA வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, வார நாட்களில், போக்குவரத்து அதிகமுள்ள காலை 6 முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் டோல் கட்டணம் 6 திர்ஹம்ஸ் ஆக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வாகன நெரிசல் அதிகம் இல்லாத நேரங்களில், அதாவது காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலும் சாலிக் கேட் வழியாக பயணிப்பதற்கான கட்டணம் 4 திர்ஹம்களாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
அதேபோல், பொது விடுமுறைகள், சிறப்பு நிகழ்வுகள் அல்லது முக்கிய நிகழ்வுகள் தவிர்த்து மற்ற ஞாயிற்றுக்கிழமைகளில் நாள் முழுவதும் கட்டணம் 4 திர்ஹம்ஸ் ஆகவும், அதிகாலை 1 மணி முதல் காலை 6 மணி வரை இலவசமாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அல் சஃபா நார்த் மற்றும் சவுத் டோல் கேட்கள் வழியாகவும், அல் மம்சார் நார்த் மற்றும் சவுத் டோல் கேட்கள் ஒரு மணி நேரத்திற்குள் ஒரு திசையில் கடந்து செல்லும்போது கட்டண முறையில் எந்த மாற்றமும் இருக்காது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் பொருள் பயனர்களுக்கு ஒரு முறை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என்பதாகும்.
மேற்கூறிய, புதிய மாறுபட்ட சாலை சுங்க கட்டண விலைகள் ரமலான் காலத்தைத் தவிர்த்து, ஆண்டின் ஒவ்வொரு நாளும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. சாலிக் நிறுவனம், புனித ரமலான் மாதத்திற்கான அதன் மாறக்கூடிய விலை நேரங்களையும் கட்டணங்களையும் பட்டியலிட்டுள்ளது. அதன்படி, சாதாரண நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சாலிக் விலை 6 திர்ஹம்களாக இருக்கும். நெரிசல் இல்லாத நேரங்கள் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் அதிகாலை 2 மணி வரையிலும் 4 திர்ஹம்ஸ் ஆகக் குறையும் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில், பொது விடுமுறைகள் மற்றும் நிகழ்வுகளைத் தவிர, பீக் ஹவர் கட்டணங்கள் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை) 4 திர்ஹம்ஸ் ஆகவும், நெரிசல் இல்லாத நேரங்கள் (காலை 7 முதல் 9 மணி வரை மற்றும் காலை 2 மணி முதல் 7 மணி வரை) 4 திர்ஹம்ஸ் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வார இறுதி நாட்கள் மற்றும் வார நாட்களில் நள்ளிரவுக்கு மேல் அதிகாலை 2 மணி முதல் காலை 7 மணி வரை கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணத்தை எவ்வாறு மிச்சப்படுத்துவது?
மேற்கூறிய படி, இன்று முதல் அமலுக்கு வந்துள்ள சாலிக்கின் புதிய சாலிக் கட்டண முறையால், அமீரகத்தில் உள்ள பல வாகன ஓட்டிகள் கட்டண அதிகரிப்பால் பாதிக்கப்படும் அதேநேரத்தில், சில குடியிருப்பாளர்கள் இலவச சாலிக் மூலம் பயனடைவார்கள். டோல் கட்டணம் தினமும் அதிகாலை 1 மணி முதல் காலை 6 மணி வரை தள்ளுபடி செய்யப்படுவதால், இந்த நேரங்களில் வாகனம் ஓட்டுபவர்கள் கொஞ்சம் பணத்தை சேமிக்கலாம்.
மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வாகன ஓட்டிகள்
ஷார்ஜாவில் வசிக்கும் ஒருவர், அதிகாலை 1 மணி முதல் காலை 6 மணி வரை இலவச சாலிக் மூலம், ஷார்ஜாவிலிருந்து அபுதாபிக்கு பயணிக்கும்போது பணத்தை சேமிக்க முடியும் என்றும், பாதை குறைவாக இருப்பதால், பெட்ரோல் செலவினம் குறையும் என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசிய போது, “இதற்கு முன்பு, நான் டோல் கேட்களைத் தவிர்க்க ஷேக் முகமது பின் சையத் சாலையில் செல்வேன். இப்போது காலை 6 மணி வரை சாலிக் பொருந்தாது என்பதால், நான் இதிஹாட் சாலை மற்றும் ஷேக் சையத் சாலையைப் பயன்படுத்துவேன், நான் அபுதாபியை அடைந்தவுடன் ஓய்வு எடுக்க முடியும்” என்று நிம்மதியை வெளிப்படுத்தியுள்ளார்.
மற்றொரு குடியிருப்பாளர், நள்ளிரவு 1 மணி முதல் காலை 6 மணி வரை சாலிக் கட்டணம் இலவசம் என்று வெளியான செய்தியைப் படித்ததும், இரவில் குறிப்பாக வார இறுதியில் துபாயை சுற்றிப் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைந்ததாகவும், துபாயைச் சுற்றி இரவு நேர பயணத்தை அனுபவிக்கும் போது, சுங்கக் கட்டணத்தைச் சேமிக்க விரும்புபவர்களுக்கு அருமையான வாய்ப்பு என்றும் கூறியுள்ளார்.
மாற்றத்திற்கு முன்பு, ஷேக் சையத் சாலையில் உள்ள மூன்று டோல் கேட்களைக் கடந்து, க்ளாக் டவரில் இருந்து துபாய் மெரினாவுக்குச் செல்லும் தனது ஒவ்வொரு வார இறுதிப் பயணத்தின் போதும் 24 திர்ஹம்ஸ் செலவழித்ததாகக் கூறிய அவர், புதிய டோல் முறையால் குறைந்தபட்சம் 48 திர்ஹம்களை சேமிக்க முடியும் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
நேரம் மற்றும் பணம் இரண்டையும் மிச்சப்படுத்துதல்
ஷார்ஜாவில் வசிக்கும் இந்தியர் புதிய இலவச சாலிக் அமைப்பு தனக்கு தனிப்பட்ட முறையில் எவ்வாறு பயனளிக்கிறது என்பதையும் பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறியதாவது: “அல் குத்ரா லேக், ‘லவ் லேக்கும்’ எனது குடும்பத்திற்கு மிகவும் பிடித்தமான இடங்கள், இங்கு நாங்கள் அடிக்கடி எங்கள் வார இறுதி நாட்களை கழித்து இரவு தாமதமாகத் திரும்புவோம். முன்பு, நான் இத்திஹாத் சாலை மற்றும் ஷேக் முகமது பின் சையத் சாலையில் ஒரு சாலிக் கட்டணம் செலுத்திச் செல்வேன்.
மாற்றாக, நான் இத்திஹாத் சாலையையும், பின்னர் பிசினஸ் பே வழியாக அல் கைல் சாலையையும் பயன்படுத்தினால், நான் இரண்டு சாலிக் கட்டணத்தைச் செலுத்துவேன். இருப்பினும், புதிய டைனமிக் விலை நிர்ணயம் மூலம், அல் குத்ராவிலிருந்து நள்ளிரவு 1 மணிக்குப் பிறகு ஷார்ஜாவுக்குத் திரும்பும் பயணம் இலவசம் என்பதால், நேரம் மற்றும் பணம் இரண்டையும் மிச்சப்படுத்தலாம்” என்றார். இவர்களைப் போலவே, வேலை அல்லது தனிப்பட்ட வேலைகளுக்காக அடிக்கடி இரவில் தாமதமாக வெளியே செல்லும் நபர்கள், இந்த மாற்றம் தனது வழக்கத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel