ஷார்ஜா சிட்டி முனிசிபாலிட்டியானது நேற்று திங்களன்று அல் கான் மற்றும் அல் காசிமியாவில் புதிதாக இரண்டு ஸ்மார்ட் பொது பார்க்கிங் இடங்களை திறந்துள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட் பாரக்கிங் தளங்கள் மொத்தம் 392 பார்க்கிங் இடங்களை வழங்குவதாகவும் ஷார்ஜா சிட்டி முனிசிபாலிட்டியால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது, ஷார்ஜாவில் 90,000க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் பார்க்கிங் இடங்கள் பயன்பாட்டில் உள்ளன.
இந்த பார்க்கிங் இடங்களில், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயக்கப்படும் கேமராக்கள் வாகனம் நுழைந்தவுடன் அதன் நம்பர் பிளேட்டை பதிவு செய்யும். பின்னர் அங்கிருந்து வெளியேறும் போது, வெளியேறும் பகுதியில் வைக்கப்பட்டுள்ள கேமராக்கள் வாகனத்தின் நம்பர் பிளேட்டை மீண்டும் படம் பிடிக்கும்.
மேலும் இந்த ஸ்மார்ட் அமைப்பின் மூலம் பார்க்கிங் கால அளவு கணக்கிடப்பட்டு, அதற்குரிய கட்டணங்களுடன் உரிமையாளருக்கு அறிவிப்பு அனுப்பபடும். பின்னர் பயனர்கள் ‘Mawqef’ ஸ்மார்ட் ஆப் மூலம் பணம் செலுத்தலாம். இது தவிர, தினசரி, வாராந்திர, மாதாந்திர மற்றும் வருடாந்திர விருப்பங்களை உள்ளடக்கிய பார்க்கிங் வசதிகளும் இந்த தளங்களில் கிடைக்கின்றன. ஆப் ஸ்டோர்களில் கிடைக்கும் Mawqef ஆப் வழியாக பயனர்கள் இந்த விருப்பங்களை தேர்வு செய்து கொள்ள முடியும்.
பார்க்கிங் காலம் மற்றும் சந்தா
ஸ்மார்ட் பார்க்கிங் பகுதிகள், நேரத்தை மிச்சப்படுத்தவும், டிஜிட்டல் சேவைகளை வழங்கவும், பொதுமக்களுக்கான செயல்முறையை எளிதாக்கவும் நகராட்சியின் முயற்சிகளுக்கு உதவுகிறது என்று ஷார்ஜா சிட்டி முனிசிபாலிட்டியின் பொது பார்க்கிங் துறையின் இயக்குநர் ஹமித் அல் கைதி தெரிவித்துள்ளார்.
அல் கான் மற்றும் அல் காசிமியா ஆகிய இரண்டு பகுதிகளும், ஒரு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வரை, வழக்கமான பொது கட்டண பார்க்கிங் முறையைப் போலவே, பல்வேறு பார்க்கிங் காலங்களை வழங்குகின்றன என்பதையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து ஷார்ஜா சிட்டி முனிசிபாலிட்டியின் வாடிக்கையாளர் சேவை இயக்குநர் காலித் பின் ஃபலாஹ் அல் சுவைதி அவர்கள் பேசுகையில், இந்த முயற்சியானது டிஜிட்டல் மாற்றம் மற்றும் பார்க்கிங் இடங்கள் மற்றும் மீறல்களைக் கண்காணிப்பதற்கான ஸ்மார்ட் ஆய்வு முறைகளுக்கான நகராட்சியின் உறுதிப்பாட்டுடன் ஒத்துப்போவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ஷார்ஜா எமிரேட்டில் பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப பார்க்கிங் வசதிகளை மேம்படுத்துவது மற்றும் பிற எமிரேட்டுகளிலிருந்து வரும் குடியிருப்பாளர்களுக்கு பார்க்கிங் கிடைப்பதை எளிதாக்குவது ஆகியவற்றை கருத்தில் கொண்டு எமிரேட் முழுவதும் ஸ்மார்ட் பார்க்கிங் பகுதிகளை ஷார்ஜா சிட்டி முனிசிபாலிட்டி விரிவுபடுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel