அஜ்மான் எமிரேட்டில் உள்ள முக்கிய சாலைகளில் ஒன்றான ஷேக் சையத் சாலையின் ஒரு பகுதியானது நாளை மறுநாள் ஜனவரி 6, திங்கள்கிழமை முதல் மூடப்படும் என்று அஜ்மான் காவல்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து அஜ்மான் காவல்துறை இன்று அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், சாலையின் ஒரு பகுதியில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுவதன் காரணமாக மூடல் அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறியதுடன் சாலையின் எந்தப்பகுதி மூடப்படும் என்பதைக் காட்டும் வரைபடத்தையும் வெளியிட்டுள்ளது. இருப்பினும், இந்த பகுதி எப்போது போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்பதைக் குறிப்பிடவில்லை.
இந்த மூடல் காரணமாக, அல் ஹீலியோ, அல் அமேரா மற்றும் ஹமிதியா பார்க் உள்ளிட்ட முக்கிய பாதிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்தானது அருகிலுள்ள வழித்தடங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் சீரான போக்குவரத்து ஓட்டத்தை உறுதி செய்வதற்காக மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
கடந்த ஜூன் 5, 2024 அன்று சுமார் 101 மில்லியன் திர்ஹம் செலவில் அஸ்-சலாம் காரிடார் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் ஷேக் சையத் காரிடார் மேம்பாட்டுத் திட்டத்தை எய்ம்ஸ் குழுமத்துக்கு வழங்கும் ஒப்பந்தங்களில் முனிசிபாலிட்டி மற்றும் திட்டமிடல் துறை – அஜ்மான் (MPDA) கையெழுத்திட்டதைத் தொடர்ந்து இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பை மேம்படுத்துவதையும், எமிரேட்டின் உள்கட்டமைப்பிற்கான புதுப்பிக்கப்பட்ட மூலோபாயத் திட்டத்திற்குள் குடியிருப்பு சமூகங்களுக்கிடையேயான தொடர்பை மேம்படுத்துவதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel