ADVERTISEMENT

துபாய்: 70 நிறுவனங்களை ஏமாற்றி 12 மில்லியன் திர்ஹம்ஸை சுருட்டிய இந்திய நிறுவனம்.!! நடந்தது என்ன..??

Published: 18 Jan 2025, 4:48 PM |
Updated: 18 Jan 2025, 6:26 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் 70க்கும் மேற்பட்ட  நிறுவனங்களிடமிருந்து சுமார் 12 மில்லியன் திர்ஹம்களுக்கு மேல் மதிப்புள்ள மடிக்கணினிகள், டயர்கள், 15,000 டவல்கள் போன்ற பல்வேறு வகையான பொருட்களானது வர்த்தக மோசடியில் திருடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வர்த்தக மோசடியில் பெரும் நிதி இழப்புகளைச் சந்தித்த சப்ளையர்கள் இது குறித்து செய்தி ஊடகங்களிடம் விவரித்துள்ளனர்.

ADVERTISEMENT

இது குறித்து வர்த்தகர்கள் கூறுகையில், மோசடிக்காரர்கள் துபாய் சிலிக்கான் ஒயாசிஸ் பகுதியில் அலுவலகம் அமைத்திருந்ததாகவும், வியாபாரிகளின் நம்பிக்கையைப் பெற, முதலில் சிறிய முன்பணமாக கொள்முதல் செய்து, பின்னர், பிந்தைய தேதியிட்ட காசோலைகள் மூலம் மொத்த ஆர்டர்களைப் பெற்றுக் கொண்டு ஒரு தடயமும் இல்லாமல் மாயமாகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

மோசடிக்காரர்கள் வழங்கிய காசோலைகள் போலி என்பதை உணர்ந்த வியாபாரிகள், போலி நிறுவனமான டைனமிக் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள முயற்சித்த போது, தொலைபேசிகள் துண்டிக்கப்பட்டதையும், அலுவலகங்கள் மற்றும் கிடங்குகள் காலியாகக் கிடந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ADVERTISEMENT

மேலும், அந்நிறுவனத்தின் பிரமுகராகக் கருதப்படும் இந்திய உரிமையாளரும் அமீரகத்திலிருந்து தப்பிச் சென்று விட்டதாகவும், அதன் ஊழியர்களும் அணுக முடியாத நிலையில் இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Cheques given to MMC Global Information Technology

ADVERTISEMENT

மோசடியில் லட்சக்கணக்கான திர்ஹம்ஸ் மதிப்புள்ள பொருட்களை பறிகொடுத்த வியாபாரிகள்

துபாயை தளமாகக் கொண்ட பாகிஸ்தானிய தொழிலதிபர் ஒருவர், மோசடிக்காரர்களிடம் இருந்து 300,000 திர்ஹம்களை முன்பணமாகப் பெற்றுக்கொண்டு, பருப்பு, பாதாம், அரிசி, சர்க்கரை மற்றும் முந்திரி ஆகியவற்றை வழங்கியிருக்கிறார். இப்போது அவர் 800,000 திர்ஹம்களுக்கு மேல் மதிப்புள்ள பொருட்களை இழந்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசிய போது, “நாங்கள் அவர்களின் அலுவலகத்திற்கு கூட சென்றோம். எல்லாம் முறையானதாகத் தோன்றியது. நாங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். இவரைப் போலவே, மற்றொரு பாதிக்கப்பட்ட நபர், சுமார் 267,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள 76 Lenovo லேப்டாப்கள் மற்றும் ரவுட்டர்களை் (routers) சப்ளை செய்து ஏமாந்து நிற்கிறார்.

மோசடி செய்த நிறுவனம் சரியான வர்த்தக உரிமத்தைக் காட்டியதாகவும், ஆடிட் அறிக்கைகளைப் பகிர்ந்துள்ளதாகவும் தெரிவித்த பாதிக்கப்பட்ட வியாபாரிகள் தாங்கள் இழந்த பொருட்களின் விவரம் அடங்கிய பட்டியலைப் பகிர்ந்து கொண்டனர். இந்தப் பட்டியலில் மோசடியில் சிக்கிய 70 நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், சில நிறுவனங்கள் தங்கள் இழப்புகளைப் புகாரளிக்க வேண்டாம் எனத் தேர்வுசெய்ததால், எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார். இது போன்ற நிறுவனங்கள் மட்டுமல்லாமல், விற்பனை பிரதிநிதிகளும் மோசடிக்கு இரையாகியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. சீன நிறுவனத்தில் பணிபுரிந்த விற்பனை பிரதிநிதி ஒருவரை, ஒப்பந்தத்தை சரியாக சரிபார்க்கவில்லை என்று குற்றம்சாட்டி அவரை வேலையிலிருந்து அந்நிறுவனம் நீக்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் பலரும் மோசடி குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர்.

பொருட்களை மீட்க முடியாமல் தவிக்கும் உரிமையாளர்கள்

சில வணிக உரிமையாளர்கள் ஷார்ஜா தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் தங்கள் சரக்குகளைக் கண்காணித்ததாகவும், ஆனால் வளாகத்தின் உரிமையாளர் பொருட்களை வாங்கியதாகக் கூறியதால் அவற்றை ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும் கூறியுள்ளனர்.

“எங்களில் சுமார் 20 பேர் சமீபத்தில் கிடங்கிற்குச் சென்றோம், ஆனால் உரிமையாளர் எங்களை உள்ளே அனுமதிக்காததால் உள்ளே செல்ல முடியவில்லை. இது ஒரு உதவியற்ற சூழ்நிலை, எங்கள் திருடப்பட்ட பொருட்கள் உள்ளே இருப்பதை அறிந்தாலும், அதைப் பற்றி எங்களால் எதுவும் செய்ய முடியாது” என்று பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கூறியுள்ளார்.

மற்ற மோசடி நிறுவனங்களுடனான இணைப்பு

ராயல் லக் ஃபுட் ஸ்டஃப் (Royal Luck Food Stuff) மற்றும் ஹார்பைன் மிடில் ஈஸ்ட் மரைன் சர்வீசஸ் (Harbine Middle East Marine Services) உள்ளிட்ட பிற மோசடி நிறுவனங்களுடன் தொடர்புடைய நிறுவனத்தால் டைனமிக் நிறுவனம் காட்டிய ஆடிட் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன என்பது விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த இரண்டு நிறுவனங்களும் டைனமிக் போன்றே ஒரே மாதிரியான சூழ்நிலையில் பிந்தைய தேதியிட்ட காசோலைகளுக்கு எதிராக பொருட்களை வாங்கிய பிறகு மாயமாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel