துபாயில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் எமிரேட்டில் பறக்கும் டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்த உள்ளதாக செய்திகள் வெளியாகும் நிலையில், மியூசியம் ஆப் தி ப்யூச்சரின் இரண்டாம் நிலையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பறக்கும் டாக்சிகளின் முழு அளவிலான மாதிரி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. சுமார் நான்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள ஏர் டாக்ஸி, இலக்குகளுக்கு இடையே பயணிக்க ஒரு மென்மையான மற்றும் திறமையான வழியை வழங்கும் என்று கூறப்படுகிறது.
ஆறு ரோட்டர்கள் மற்றும் மூன்று வட்டமான தரையிறங்கும் சறுக்குகளுடன் இருக்கும் ஏர் டாக்ஸியின் வடிவமைப்பு, பார்ப்பதற்கு பாரம்பரிய ஹெலிகாப்டர்களைப் போல இருப்பதால், இத்தகைய ஏர் டாக்ஸியில் பறக்கும் எதிர்காலம் குறித்து பார்வையாளர்கள் ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. மேலும், சில குடியிருப்பாளர்கள் ஏர் டாக்ஸி சேவை தொடங்கப்பட்டதும், அதைப் பயன்படுத்துவது குறித்த தங்கள் எண்ணங்களை ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளனர்.
துபாயில் வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர், சிட்டியின் மையப் பகுதியிலிருந்து மெரினாவுக்கு பத்து நிமிடங்களில் பயணிக்க முடியும் என்றால், ஏர் டாக்ஸி சேவைக்கு 150 திர்ஹம்ஸ் வரை செலுத்தலாம் என்று கூறியதுடன், பறக்கும் டாக்ஸி குறித்து உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார். மற்றொரு குடியிருப்பாளர், பறக்கும் டாக்சிகள் துபாயில் போக்குவரத்தில் எவ்வாறு புரட்சியை ஏற்படுத்தக்கூடும் என்பதைப் பார்க்க ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மற்றொரு குடியிருப்பாளர் பேசுகையில், சேவை விலை உயர்ந்ததாக இருக்கும்போது, சரியான நேரத்தில் தேவைப்படும் சூழ்நிலைகளில் இது பயனுள்ளது என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். அதேசமயம், மற்றொரு குடியிருப்பாளர் பாதுகாப்பு குறித்த கவலைகளை மேற்கோள் காட்டி, விமான டாக்ஸியை முயற்சிக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.
ஏர் டாக்ஸி சிறப்பம்சங்கள்
இந்த ஏர் டாக்ஸியில் நான்கு பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளதால், இது குறிப்பிடத்தக்க நிலைத்தன்மையுடன் இயங்குவதுடன் ஒரு ஹெலிகாப்டரைப் போல செங்குத்தாக புறப்படும் திறன்களைக் கொண்டுள்ளது. ஆறு ப்ரொப்பல்சன் யூனிட்களால் இயக்கப்படும் இந்த ஏர் டாக்ஸி, ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 160 கிமீ தூரத்தை கடக்கும் மற்றும் மணிக்கு 320 கிமீ வேகத்தை விரைவாக அடையும் திறன் கொண்டது.
DXB விமான நிலையத்திலிருந்து இருந்து பாம் ஜுமேராவுக்கு சாலை வழியாக பயணித்தால் சுமார் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணிநேரம் வரை ஆகும். ஆனால், ஏர் டாக்ஸியில் சுமார் 10 முதல் 12 நிமிடங்களில் பயணிக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஜாபி எஸ் 4-க்கான கட்டணத்தை அதிகாரிகள் இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வான்வழி டாக்ஸி சேவைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பறக்கும் டாக்சிகளை அறிமுகப்படுத்திய முதல் நகரமாக துபாய் பதிவு செய்ய உள்ளது. இந்நிலையில் துபாயில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் பலரும் பறக்கும் டாக்ஸி தங்கள் அன்றாட பயணத்திற்கான நடைமுறை தீர்வாக இருக்கும் என நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel