ADVERTISEMENT

துபாய்: வில்லாவுக்குள் புகுந்து 6 இலட்சம் திர்ஹம்ஸ் நகைகளை திருடிய நபர்கள்..!! நாட்டை விட்டு தப்பிக்க முயன்ற போது கையும் களவுமாக மாட்டிய சம்பவம்…

Published: 12 Feb 2025, 9:35 AM |
Updated: 12 Feb 2025, 9:35 AM |
Posted By: Menaka

துபாயில் சுமார் 600,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள ‘Bulgari’ மற்றும் ‘Tiffany’ வகை தங்க நகைகளைத் திருடிய குற்றத்திற்காக இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், 528,000 திர்ஹம்ஸ் அபராதம் செலுத்துமாறு துபாய் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

கடந்த ஏப்ரல் 19, 2024 அன்று துபாயின் அல் பராரி பகுதியில் உள்ள ஒரு வில்லாவில் இந்த திருட்டு நடந்ததாகவும், அந்த வில்லாவில் வசித்த பாதிக்கப்பட்ட பெண், ஏப்ரல் 20, 2024 அதிகாலையில் நகைகள் காணாமல் போனதை அறிந்த பிறகு, திருடப்பட்டதாக புகார் கொடுத்ததாகவும் பதிவுகள் கூறுகின்றன. பின்னர், மீட்கப்பட்ட பொருட்களை தனது திருடப்பட்ட நகை என்று அவர் அடையாளம் காட்டியதாகவும் கூறப்படுகிறது.

அன்று என்ன நடந்தது?

நீதிமன்ற அறிக்கைகளின் படி, குற்றம்சாட்டப்பட்டவர்களில் முதல் நபர்  இரவில் இரண்டு ஸ்க்ரூடிரைவர்கள் மற்றும் ஒரு நெம்புகோலுடன் (crowbar) வில்லாவில் நுழைந்ததாகவும், இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி, ஒரு உலோகத்தினால் ஆன பாதுகாப்பு பெட்டியை (metal safe) உடைத்து, 285,000 திர்ஹம் மதிப்புள்ள பல்கேரி தங்க நெக்லஸ் உட்பட பலவகையான நகைகளைத் திருடியதாகவும் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், 80,000 மற்றும் 70,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள இரண்டு நெக்லஸ்கள், 8,000, 4,000 மற்றும் 5,000 திர்ஹம்ஸ் மதிப்புடைய மூன்று தங்க மோதிரங்கள், 55,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள ஒரு தங்க நெக்லஸ்; 8,000 திர்ஹம் மதிப்புள்ள ஜெனிஃபர் மேயர் தங்க நெக்லஸ், 8,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள டியோர் (Dior) தங்க முலாம் பூசப்பட்ட நெக்லஸ் மற்றும் 5,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள வளையல் ஆகியவை திருடு போனதாக அந்தப் பெண் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொருட்களை திருடிய பின்னர், திருட்டை செய்த முதலாம் நபர் இரண்டாவது நபரைத் தொடர்பு கொண்டு, தான் விலையுயர்ந்த நகைகளை திருடிவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார். இரண்டாவது நபர் திருடப்பட்ட பொருட்களை வாங்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.  தொடர்ந்து, மூன்றாவது நபரான அவரது மனைவி துபாய்க்குச் சென்று திருடப்பட்ட பொருட்களை நாட்டிற்கு வெளியே கடத்துவதற்கு உதவியதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

மேலும், குற்றம் சாட்டப்பட்ட பெண், அதிகாரிகளிடம் பிடிபடாமல் இருப்பதற்காக தனது லக்கேஜ்களில் சில நகைகளை மறைத்து வைத்தும், மற்ற நகைகளை தானே அணிந்து கொண்டும் சென்றிருக்கிறார். இருப்பினும், அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் தம்பதியினர் நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். அவர்களது உடைமைகளை சோதனையிட்டதில் திருடப்பட்ட நகைகள் தெரியவந்திருக்கின்றது.

இதற்கிடையில், காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணைகள் மூலம் முதல் நபரைக் கைது செய்தனர், மேலும் அவரது வீட்டில் சோதனை நடத்தியதில் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விசாரணையின் போது, ​​முதல் நபர் திருடியதை ஒப்புக்கொண்டதுடன், வில்லாவை எவ்வாறு உடைத்து, பெட்டகத்தை திருடி, பின்னர் அதை உடைத்து விலைமதிப்பற்ற பொருட்களை மீட்டெடுத்தார் என்ற விவரங்களை வாக்குமூலம் அளித்துள்ளார். இரண்டாவது நபர் திருடப்பட்ட நகைகளை வாங்கி, அதை நாட்டிலிருந்து கடத்த முயற்சித்ததாக ஒப்புக்கொண்டார். அவரது மனைவியும் திருடப்பட்ட பொருட்களை கொண்டு செல்ல உதவுவதாக ஒப்புக்கொண்டார். இருப்பினும் நீதிமன்ற நடவடிக்கைகளின் போது, ​​அவர்கள் தங்கள் மனுவை மாற்றிகொண்டதாகக் கூறப்படுகிறது.

சீனாவைச் சேர்ந்த மூன்று நபர்களும் குற்றவாளிகள் என்பது நிரூபிக்கப்பட்டதும், அவர்களுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியது  மற்றும் அவர்களின் தண்டனைகளை முடித்த பின்னர் நாடு கடத்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, அவர்கள் அபராதம் செலுத்தத் தவறினால், அவர்கள் ஒவ்வொரு 100 திர்ஹம்ஸ்க்கும் ஒரு நாள் சிறையில் சேவை செய்ய வேண்டியிருக்கும் என்பதையும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel