துபாயில் தொடர்ந்து போக்குவரத்திற்கான பல்வேறு நவீன திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில் துபாயின் மிக அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட பகுதிகளை இணைக்க வடிவமைக்கப்பட்ட ‘துபாய் லூப்’ என்ற லட்சிய திட்டத்தில் துபாய் எமிரேட்டானது பிரபல தொழிலதிபர் எலோன் மஸ்க்குடன் இணைவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு துபாயில் நடைபெற்று வரும் உலக அரசாங்கங்களின் உச்சி மாநாடு (WGS) 2025 இன் 3 ஆம் நாளில், எலான் மஸ்க் மெய்நிகர் காணொளி வாயிலாக அமீரகத்தின் செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் தொலைதூர பணி பயன்பாடுகளுக்கான மாநில அமைச்சர் ஓமர் அல் ஒலாமாவுடன் பேசிக் கொண்டிருந்தபோது தெரியவந்துள்ளது.
இது பற்றி வெளியிடப்பட்ட தகவல்களின் படி, 17 கிலோமீட்டர் பரப்பளவில் வரவிருக்கும் இந்த திட்டத்தில் 11 நிலையங்கள் இருக்கும் என்றும், மேலும் ஒரு மணி நேரத்திற்கு 20,000 பயணிகளை கொண்டு செல்லும் திறன் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது அவர்கள், இந்த திட்டம் குறித்த கூடுதல் தகவல்களை ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், இத்திட்டம் நகரத்தில் “போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்தும்” என்று கூறியதுடன், நகரம் தொடர்ந்து “போக்குவரத்தின் எதிர்காலத்தை மறுவரையறை செய்யும்” மற்றும் உலகளாவிய வரையறைகளை அமைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எமிரேட்டில் சுரங்கப்பாதை உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒரு பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த துபாய் லூப் திட்டமானது பயணிகள் எந்த நிறுத்தமும் இல்லாமல் நேரடியாக தங்கள் இடங்களுக்கு பயணிக்க அனுமதிக்கும் மற்றும் மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அமைப்பு மின்சார வாகனங்களால் இயக்கப்படும் என்பதால், இது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மக்கள்தொகை அடர்த்தியான பகுதிகளை இணைக்கும்
இது குறித்து அமைச்சர் அல் ஓலாமா பேசுகையில், இந்த லூப் துபாயின் பரபரப்பான பகுதிகளை உள்ளடக்கும் என்றும், இது ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு விரைவாக பயணிக்க அனுமதிக்கிறது என்றும் விளக்கியுள்ளார். கூடுதலாக, அல் ஓலாமா கூட்டாண்மைக்கு உற்சாகத்தை வெளிப்படுத்தி, மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த உரையாடலின் போது, இந்த போக்குவரத்து அனுபவத்தை பற்றி மஸ்க் கூறுகையில், “மக்கள் இதை முயற்சித்தவுடன், இது மிகவும் அருமையாக இருப்பதாக அவர்கள் நினைப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். போக்குவரத்து சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் நகரங்களை மாற்றுவதற்கும் பாதுகாப்பான, வேகமான மற்றும் மலிவு சுரங்கங்களை உருவாக்குவதற்கான ‘The Boring Company’யின் முயற்சிகள் பற்றியும் மஸ்க் பேசியுள்ளார்.
அதைத் தொடர்ந்து, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் லாஸ் வேகாஸில் நிறுவனம் எவ்வாறு சுரங்கங்களை உருவாக்கியது என்பதைப் பற்றி பேசிய மஸ்க், இது ஒரு சிறந்த யோசனை என்பதற்கான விபரங்களையும் தெரியப்படுத்தியுள்ளார். அதுமட்டுமில்லாமல், மோசமான வானிலையின் போது சத்தம், காற்று மற்றும் பாதுகாப்புக் கவலைகள் போன்ற ஏர்டாக்சிகள் அல்லது ஹெலிகாப்டர்களுடன் வரும் பிரச்சினைகள் இல்லாமல் சுரங்கங்கள் நெரிசலை எவ்வாறு தணிக்கும் என்பதையும் குறிப்பிட்டார். கூடுதலாக, பூகம்பம் போன்ற தீவிர சூழ்நிலைகளில் சுரங்கங்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருந்தன என்பதையும் அவர் எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel