வரும் மார்ச் மாதம் துவங்கவிருக்கும் ரமலானை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகள் அமீரகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றாக இந்த வருடம் புதிதாக துபாய் மாலில் ஷாப்பிங்கிற்காக பிரத்யேக பகுதி திறக்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. துபாயின் மிகப்பெரிய வணிக வளாகமான புகழ்பெற்ற துபாய் மால், வரும் மார்ச் 1 ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் ரமலான் நேரத்தில் ஒரு புதிய பகுதியைத் திறக்க உள்ளதாக கூறியுள்ளது.
இது குறித்து Emaar பிராப்பர்ட்டீஸ் நிறுவனர் மொஹமத் அலபார், X தளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், புதிய பகுதி 65 பிரத்யேக பிராண்டுகள் மற்றும் பலவிதமான உணவு மற்றும் பான விற்பனை நிலையங்களை வழங்கும் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். இந்த பகுதி திறக்கப்பட்டால் பார்வையாளர்களுக்கு இது கூடுதல் ஷாப்பிங் விருப்பங்களை துபாய் மாலில் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், துபாய் மாலின் 1.5 பில்லியன் திர்ஹம்ஸ் மதிப்பில் பெரிய விரிவாக்கத்திற்கான திட்டங்களையும் Emaar பிராப்பர்டீஸ் வெளியிட்டது. இதில் 240 புதிய சொகுசு கடைகள் மற்றும் கூடுதல் சாப்பாட்டு விருப்பங்கள் அடங்கும். இந்த விரிவான திட்டத்தின் பணிகள் ஏற்கனவே நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமல்லாமல் கடந்த 2023 ஆம் ஆண்டில் உலகில் அதிகம் பார்வையிடப்பட்ட இடமாக துபாய் மால் பெயரெடுத்துள்ளது. அந்த ஆண்டில் மட்டும் 105 மில்லியன் பார்வையாளர்களை மால் வரவேற்றிருக்கின்றது. இது முந்தைய ஆண்டை விட 19% அதிகரிப்பைக் குறிக்கிறது. உலகின் இரண்டாவது பெரிய ஷாப்பிங் மாலாக உள்ள துபாய் மால், சுமார் 1.2 மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவில் 1,200 சில்லறை கடைகளை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel