அமீரகத்தில் ரமலான் மாதம் துவங்கவுள்ள நிலையில், துபாய் காவல்துறையினர் தங்களது வருடாந்திர “Combat Begging” பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர், இது ரமலான் மாதத்தில் மக்களின் தாராள மனப்பான்மையைப் பயன்படுத்தி பிச்சை எடுப்பது தொடர்பான மோசடிகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டில், துபாய் எமிரேட் முழுவதும் 384 பிச்சைக்காரர்களை கைது செய்ததாகவும், கைது செய்யப்பட்ட பிச்சைக்காரர்களில் 99 சதவிகிதத்தினர் பிச்சை எடுப்பதை ஒரு தொழிலாக பார்க்கிறார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, அவர்கள் நோய்வாய்ப்பட்ட அல்லது காயமடைந்ததாக நடிப்பது, குழந்தைகளை பயன்படுத்துவது, வயதானவர்கள் அல்லது ஊனமுற்ற நபர்கள் போல மக்களின் அனுதாபத்தைப் பெறுவது அல்லது மசூதிகள் அல்லது மருத்துவ செலவினங்களுக்காக பணம் திரட்டுவதாக பொய்யாகக் கூறுவது போன்ற ஏமாற்றும் தந்திரங்களை பயன்படுத்துகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் , பிச்சை எடுப்பது சட்டவிரோதமானது மற்றும் 5,000 திர்ஹம்ஸ் அபராதம் மற்றும் மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. இவ்வாறு பிச்சை எடுப்பதில் அல்லது பிச்சை ஏற்பாடு செய்வதில் அல்லது நபர்களுக்கு வெளியில் இருந்து நபர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் ஈடுபட்டவர்கள் ஆறு மாத சிறைத்தண்டனையும், 100,000 திர்ஹம்ஸ் அபராதத்தையும் எதிர்கொள்ளலாம். கூடுதலாக, அனுமதி இல்லாமல் நிதி திரட்டுவது 500,000 திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்படும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், துபாயில் 2,085 பிச்சைக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த பிரச்சாரம் தனிநபர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட பிச்சை எடுப்பது பற்றிய பிரச்சினை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் நம்பகமான, உத்தியோகபூர்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் மட்டுமே நன்கொடை அளிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்துகிறது.
பிச்சைக்காரர்கள் பெரும்பாலும் மசூதிகள், சந்தைகள் மற்றும் நெரிசலான பகுதிகளுக்கு அருகில் காணப்படுகிறார்கள், அதே நேரத்தில் டிஜிட்டல் மோசடி செய்பவர்கள் போலி பிரச்சாரங்களைப் பயன்படுத்தி, “மருத்துவ அவசரநிலைகள்” அல்லது “வெளிநாட்டில் மசூதி கட்டுமானத்திற்கு” பணம் திரட்டுவதாகக் கூறி ஏமாற்றுகின்றனர்.
இது குறித்து துபாய் காவல்துறையின் சமூக விரோத குற்றத் துறையின் தலைவர் பிரிகேடியர் அலி சேலம் அல் ஷம்சி அவர்கள் பேசிய போது, பணம் உண்மையிலேயே தேவைப்படுபவர்களை அடைவதை உறுதி செய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட தொண்டு அமைப்புகளுக்கு மட்டுமே நன்கொடைகள் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், சந்தேகத்திற்கிடமான பிச்சை எடுக்கும் நடவடிக்கைகளை புகாரளிக்கவும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel