ADVERTISEMENT

துபாய்: ஒரே மாதிரி இருந்ததால் மாறிப்போன லக்கேஜ்.. 25,000 திர்ஹம்ஸை தொலைத்த பயணி.. விரைந்து செயல்பட்ட காவல்துறை.. நடந்தது என்ன..??

Published: 10 Feb 2025, 8:59 AM |
Updated: 10 Feb 2025, 8:59 AM |
Posted By: Menaka

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் (DXB) 25,000 திர்ஹம்ஸ் பணத்தைக் கொண்ட லக்கேஜை தொலைத்து தவித்த பயணிக்கு துபாய் காவல்துறை அதை உடனடியாக கண்டுபிடித்து ஒப்படைத்த சம்பவம் பலரின் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

ADVERTISEMENT

எகிப்திய பயணியான முனிர் சைத் இப்ராஹிம் என்பவர், தவறுதலாக மற்றொரு பயணியின் லக்கேஜை பேக்கேஜ் கன்வேயர் பெல்ட்டில் இருந்து எடுத்ததாகவும், அது வடிவத்திலும் நிறத்திலும் அவரது லக்கேஜைப் போலவே இருந்ததால் இந்த குழப்பம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. தோராயமாக 25,710 திர்ஹம்ஸ் பணம் உட்பட, அவருடைய உடமைகள் மற்றும் பயண ஆவணங்கள் அடங்கிய அந்த லக்கேஜை துபாய் காவல்துறையின் பொது விமான நிலையப் பாதுகாப்புத் துறை அரை மணி நேரத்திற்குள் மீட்டு அவருக்குத் திருப்பிக் கொடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இது குறித்து முனீர் பேசிய போது, ஒரு மணி நேரத்தில் சீனாவிற்கு மற்றொரு விமானத்தை பிடிக்கும் அவசரத்தில் சென்ற போது தனது லக்கேஜை தவறவிட்டதை உணர்ந்ததாகவும், உடனடியாக அரைவல் ஹாலில் உள்ள விமான நிலைய போலீஸ் அலுவலகத்திற்கு சென்று அதிகாரியிடம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

அதையடுத்து, பணியிலிருந்த அதிகாரி, விமான நிலையத்திற்குள் நுழைந்தது முதல் பயணிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஒரு பணிக்குழுவை உருவாக்கியதுடன் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததாகவும், கைரோ விமான நிலையத்திலிருந்து வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸைத் தொடர்பு கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அதிகாரிகளால் நடத்தப்பட்ட விசாரணையில், விமான நிலைய நடைபாதையில் தனது உறவினர்களுக்காக காத்திருந்த எகிப்திய பெண் பயணி ஒருவரின் லக்கேஜூடன் இந்த லக்கேஜ் மாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணுக்கு லக்கேஜ் மாறியது தெரியாததால், போலீசார் வந்து தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, தவறை விளக்கி லக்கேஜை திருப்பிக் கொடுத்ததும் ஆச்சரியமடைந்துள்ளார்.

மேலும், அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு லக்கேஜை மீட்டு கொடுத்ததால், முனீர் தனது விமானத்தை சீனாவிற்கு பிடிக்க முடிந்தது. எனவே, இரு பயணிகளும் துபாய் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் விரைவான செயலுக்காக தங்கள் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.

துபாய் காவல்துறையினர் பயணிகளின் இது போன்ற சம்பவத்தில் உதவிக்கு வருவது இது முதல் முறை அல்ல. கடந்த 2023 ஆம் ஆண்டில், விமான நிலையத்தில் தனது கைக்கடிகாரத்தை மறந்த இந்திய விமானி ஒரு மாதத்திற்குப் பிறகு தனது கைக்கடிகாரத்தை அதிகாரிகள் திருப்பிக் கொடுத்தபோது ஆச்சரியமடைந்த நிகழ்வும் உண்டு. இதேபோல், 2022 ஆம் ஆண்டில், ஒரு டாக்ஸி டிரைவர் பயணி இழந்த பணத்தை கண்டுபிடித்ததை அடுத்து, விமான நிலையத்தில் அந்த பணத்தை இழந்த பாகிஸ்தான் பயணியை கண்டறிந்து போலீசார் 77,000 திர்ஹம்ஸ் தொகையை திருப்பி கொடுத்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel