துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) துபாய்-அல் அய்ன் சாலையில் எக்ஸிட் 58 இல் கூடுதலாக புதிய எக்ஸிட் திறக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது அல் அய்ன் சிட்டி மற்றும் துபாய் ஆகிய இரண்டிற்கும் செல்லும் ஓட்டுநர்களின் பயண நேரத்தைக் குறைக்கும் நோக்கில் திறக்கப்பட்டுள்ளதாக RTA தெரிவித்துள்ளது.
துபாய்-அல் அய்ன் சாலையில், குறிப்பாக அல்-ஃபாகா பகுதிக்கு அருகில், அதிகரித்து வரும் போக்குவரத்தை கையாள தொடர்ச்சியான மேம்படுத்தல்களின் ஒரு பகுதியாக இந்த புதிய எக்ஸிட் திறக்கப்பட்டுள்ளதாகவும், இது அல்-ஃபகா பகுதிக்கு சற்று முன்பு யு-டர்ன் சுரங்கப்பாதைக்கு வழிவகுக்கிறது என்றும் ஆணையம் கூறியுள்ளது.
இது குறித்து RTAவின் சாலைகளின் இயக்குநர் ஹமாத் அல் ஷெஹி அவர்கள் பேசிய போது, விரைவான மற்றும் புதுமையான தீர்வுகளைப் பயன்படுத்துவதன் மூலம், துபாயின் எதிர்கால பார்வையை ஆதரிப்பதையும், உள்கட்டமைப்பு மற்றும் நிலையான போக்குவரத்தில் உலகளாவிய தலைமையாக அதன் நிலையை பராமரிப்பதையும் RTA நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அவர் தொடர்ந்து பேசுகையில், புதிய எக்ஸிட் பாதைக்கு மேலதிகமாக, துபாய்-அல் அய்ன் சாலையில் அல் அய்னை நோக்கி 430 மீட்டர் டிசலரேஷன் பாதை (deceleration lane) உட்பட பிற மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, இது ஓட்டுநர்கள் எக்ஸிட் 58 ஐ எளிதாக அணுக உதவுகிறது. தற்போதுள்ள சுரங்கப்பாதையின் அணுகலை மேம்படுத்துவதற்கும், யு-டர்ன்ஸ் பாதுகாப்பானதாக்குவதற்கும் ஒரு புதிய ரவுண்டானா கட்டப்பட்டது என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
“அதுமட்டுமின்றி, அல் அய்னை நோக்கி வெளியேறும் வாகனங்களுக்கு 600 மீட்டர் ஆக்சிலரேஷன் பாதை சேர்க்கப்பட்டுள்ளது, இது முக்கிய போக்குவரத்து ஓட்டத்துடன் சீராக ஒன்றிணைக்க அனுமதிக்கிறது. இந்த மாற்றங்கள் போக்குவரத்து பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் விபத்துக்களின் அபாயத்தைக் குறைப்பதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel