ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தின் போது பொதுத் துறை ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட வேலை நேரம் அறிவிக்கப்படும். அந்த வகையில், இந்தாண்டு புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு, ஐக்கிய அரபு அமீரகம் அரசு ஊழியர்களுக்கான உத்தியோகபூர்வ வேலை நேரங்களை மாற்றியமைத்துள்ளது.
திருத்தப்பட்ட வேலை நேரங்களின் படி, திங்கள் முதல் வியாழன் வரை, வேலை நேரம் காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரையிலும், வெள்ளிக்கிழமைகளில், மணிநேரம் காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், சில ஊழியர்கள் தங்கள் பணித் தேவைகளின் அடிப்படையில் வெவ்வேறு மணிநேரங்களைக் கொண்டிருக்கலாம் என்று அரசாங்க மனித வளங்களுக்கான மத்திய ஆணையம் (FAHR) தெரிவித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல், அங்கீகரிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மொத்த பணியாளர்களில் 70% வரை வெள்ளிக்கிழமைகளில் தொலைநிலை வேலை அனுமதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு நிறுவனங்களைத் தொடர்ந்து விரைவில் தனியார் துறை ஊழியர்களுக்கும் ரமலான் மாத வேலை நேரங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ரமலான் தொடக்கத்தைப் பொறுத்தவரை, அமீரகத்தின் சர்வதேச வானியல் மையம் (IAC), மார்ச் 1, சனிக்கிழமை, உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான இஸ்லாமியப் பெருமக்கள் நோன்பைத் தொடங்கும் நாளாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியது, ஏனெனில் பிப்ரவரி 28 அன்று பிற்பகல் பிறை நிலவு என எதிர்பார்க்கப்படுகின்றது. பிளை பார்ப்பதன் அடிப்படையில் ரமலானின் ஆரம்பம் தீர்மானிக்கப்படுகிறது, மேலும் புனித மாதத்தின் தொடக்கத்தை உறுதிப்படுத்த உத்தியோகபூர்வ குழுக்கள் பிப்ரவரி 28 அன்று சந்திக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
வழக்கமான வேலை நேரம்:
ரமலான் மாதம் தவிர்த்து, UAE மத்திய அரசு நான்கரை நாள் வேலை வாரத்தைப் பின்பற்றுகிறது. அதன்படி, அரசு ஊழியர்கள் திங்கள் முதல் வியாழன் வரை, காலை 7:30 மணி முதல் மாலை 3:30 மணி வரை ஒரு நாளைக்கு 8 மணி நேரமும், வெள்ளிக்கிழமைகளில் காலை 7:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரையிலும் வேலை செய்கிறார்கள்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அதிகாரப்பூர்வ வார இறுதி சனி மற்றும் ஞாயிறு ஆகும். அபுதாபி, துபாய், அஜ்மான், உம் அல் குவைன், ராஸ் அல் கைமா மற்றும் புஜைரா ஆகிய எமிரேட்ஸில் உள்ள உள்ளூர் அரசாங்க நிறுவனங்கள் இதேபோன்ற வேலை வார முறையைப் பின்பற்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ஷார்ஜாவில், கூட்டாட்சி ஊழியர்கள் திங்கள் முதல் வியாழன் வரை, காலை 7:30 மணி முதல் மாலை 3:30 மணி வரை நான்கு நாள் வாரம் வேலை செய்கிறார்கள். ஷார்ஜாவில் அதிகாரப்பூர்வ வார இறுதி வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel