ADVERTISEMENT

ஓமானுக்கு புதிய பார்டர் கிராஸிங்கைத் திறந்த அமீரகம்…!! இரு நாடுகளுக்கும் இடையே பயணத்தை மேம்படுத்த நடவடிக்கை..!!

Published: 27 Feb 2025, 5:54 PM |
Updated: 27 Feb 2025, 5:54 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் அண்டை நாடான ஓமானிற்கு அமீரகவாசிகள் பலரும் தரைவழியாக அவ்வப்போது பயணித்து வருகின்றனர். குறிப்பாக விசிட் விசாவை நீட்டிப்பது போன்ற ஒரு சில சந்தர்ப்பங்களில் அமீரகத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலையில் தரைவழி மார்க்கமாக ஓமானிற்கு சென்ற பின்னர் மீண்டும் விசாவை பெற்று அமீரகத்திற்கு வரக்கூடிய நடைமுறையானது பல காலமாக நடந்து கொண்டிருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் அமீரக குடியிருப்பாளர்களும் நீண்ட நாட்கள் விடுமுறையின் போது ஓமானிற்கு சுற்றுலா செல்வதையும் மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இவ்வாறு அமீரகத்தில் இருந்து ஓமானிற்கு செல்வதற்கும் ஓமானில் இருந்து அமீரகத்திற்கு வருவதற்கும் துபாயின் ஹத்தாவில் எல்லைச் சாவடி செயல்பட்டு வருகின்றது. இதனையே அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் புதிதாக ஒரு எல்லைச்சாவடியை திறந்துள்ளதாக அமீரகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமானை இணைக்கும் திப்பா அல் ஃபுஜைராவில் உள்ள Wam border crossing என்ற எல்லை பகுதியில் பிப்ரவரி 26 புதன்கிழமை முதல் செயல்பாடுகள் தொடங்கியுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே சுமூகமான பயணத்தை எளிதாக்குவதற்கும், குடிமக்கள் மற்றும் பயணிகளின் நடமாட்டத்தை எளிதாக்குவதற்கும், இணைப்பை மேம்படுத்தும் வகையில் புதிய எல்லைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தவும், பயணத்தை எளிதாக்கவும் புதிய வசதி வடிவமைக்கப்பட்டுள்ளது என்று உயர் அதிகாரி அதிகாரி ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

எனவே, புதிதாகச் செயல்படும் எல்லைச் சாவடியைப் பயன்படுத்தும் போது தேவையான அனைத்து பயண நடைமுறைகளையும் பின்பற்றுவதையும், தேவையான ஆவணங்களை வைத்திருப்பதையும் பயணிகள் உறுதிசெய்யுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக வெளியான விபரங்களில், சுமார் 1 மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த எல்லைச் சாவடி 19 கட்டிடங்களைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான (ICP) ஃபெடரல் ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் மேஜர் ஜெனரல் சுஹைல் சயீத் அல் கைலி, எல்லைச் சாவடியின் செயல்பாட்டுக் கட்டம் புதன்கிழமை தொடங்கியது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். அதேபோல், ஓமானை ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைக்கும் வகையில், முசந்தத்தில் திப்பா எல்லைச் சாவடியைத் திறப்பதாகவும் ஓமானிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்த நடவடிக்கையானது தரை எல்லைகள், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் ஆகியவற்றிற்கான பரந்த பாதுகாப்பு மேலாண்மை முயற்சிகளின் ஒரு பகுதியாக எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான பயணம் மேலும் எளிதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel