ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் பொது இடங்களில் கைவிடப்பட்ட அல்லது நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் புறக்கணிக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பான கடுமையான விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் ஒரு பகுதியாக, பொது பகுதிகள் சுத்தமாகவும் பார்வைக்கு ஈர்க்கக்கூடியதாகவும் இருப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு புதிய அபராதங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அபுதாபி எமிரேட்டின் பொதுவான தோற்றத்தை சிதைக்கும் நிலையில், தங்கள் கார்களை பொது இடங்களில் விட்டுச்செல்லும் வாகன உரிமையாளர்களுக்கு ஏராளமான அபராதங்கள் விதிக்கப்படும். இதில் வாகனங்களை கழுவாமல் அழுக்காக விட்டுவிடுவது போன்றவையும் அடங்கும். மேலும் விதிமீறலைப் பொறுத்து 4000 திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபராதங்களும் மீறல்களும்
1. முதல் மீறல்: 500 திர்ஹம்ஸ் அபராதம்
2. இரண்டாவது மீறல்: 1,000 திர்ஹம்ஸ் அபராதம்
3. மூன்றாவது மீறல்: 2,000 திர்ஹம்ஸ் அபராதம்
கூடுதலாக, நகரின் பொது தோற்றத்தை எதிர்மறையாக பாதிக்கும் வகையில், ஒரு வாகனத்தின் உடைந்த பாகங்களை பொது இடங்களில் கைவிட்டதற்காக விதிக்கப்படும் அபராதங்களையும் அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான விதிமீறல்களுக்கு அதிகபட்சமாக 4,000 திர்ஹம்ஸ் வரையிலும் அபரதாம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
1. முதல் மீறல்: 1,000 திர்ஹம்ஸ் அபராதம்
2. இரண்டாவது மீறல்: 2,000 திர்ஹம்ஸ் அபராதம்
3. மூன்றாவது மீறல்: 4,000 திர்ஹம்ஸ் அபராதம்
அபுதாபியில் உள்ள அதிகாரிகள் வாகன ஓட்டிகளுக்கு தங்கள் வாகனங்களை கைவிடுவது பற்றியும், குறிப்பாக கோடை மாதங்களில், குடியிருப்பாளர்கள் விடுமுறையில் செல்வதால் பொது இடங்களில் கார்கள் அழுக்காக விடப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், எமிரேட்டின் அழகியல் தோற்றம் பாதிக்கப்படும் என்பது பற்றியும் முந்தைய பிரச்சாரங்களில் எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
இதே போன்ற நடவடிக்கைகள் மற்ற எமிரேட்ஸிலும் உள்ளன. உதாரணமாக, துபாயில், குடியிருப்பாளர்கள் தங்கள் வாகனங்களை பொது இடங்களில் நீண்ட காலத்திற்கு கழுவாமல் நிறுத்தி வைத்தால் 500 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படுகிறார்கள். கைவிடப்பட்ட வாகனங்களைக் கண்டுபிடிக்கும் பணியில் ஆய்வாளர்கள் தீவிரமாக வேலை செய்கின்றனர். மேலும் ஒரு பராமரிக்கப்படாத கார் அடையாளம் காணப்பட்டவுடன், சுத்தம் செய்ய 15 நாள் சலுகைக் காலத்துடன் ஒரு அறிவிப்பு வழங்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel