துபாயில் இருக்கக்கூடிய ஒரு சில பகுதிகளில் தானியங்கி பாரக்கிங் அமைப்பானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பார்க்கிங் மீட்டர் அல்லது பார்க்கிங் டிக்கெட்டுகள் இல்லாமல் எளிமையான முறையில் வாகனத்தை பார்க்கிங் செய்ய அனுமதிக்கின்றது. துபாயின் கிழக்கு கிரசென்ட் ஆஃப் தி பாம் ஜுமேராவில் உள்ள ஒரு சில பகுதிகளில் டிக்கெட் இல்லாத மற்றும் முழுமையாக தானியங்கி முறையில் செயல்படும் இந்த புதிய பார்க்கிங் முறையானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு சென்சார்கள் மற்றும் கேமராக்களைப் பயன்படுத்தி வாகனங்களைக் கண்டறிந்து, வாகன உரிமத் தகட்டின் அடிப்படையில் தானாகவே பார்க்கிங் கட்டணங்களைக் கணக்கிடுகிறது, இதனால் ஓட்டுநர்கள் டிக்கெட்டுகள் அல்லது மீட்டர்கள் தேவையில்லாமல் பார்க்கிங் செய்வது எளிதாக்கப்படுகின்றது.
இப்பகுதியில் கடந்த 2022 முதல் கட்டண பார்க்கிங் அமல்படுத்தப்பட்டு, பணமில்லா பார்க்கிங் மீட்டர்கள் பின்னர் நிறுவப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கிழக்கு கிரசென்ட் பகுதியில் உள்ள பார்க்கிங் சேவையானது சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமோ (RTA) அல்லது பொது பார்க்கிங் ஆபரேட்டரான PJSC நிறுவனமோ இல்லாமல் தனியார் நிறுவனமான பார்கோனிக் (Parkonic) மூலம் இயக்கப்படுகிறது. பார்கோனிக் அதன் பார்க்கிங் அமைப்பு பற்றி அதன் வலைத்தளத்தில் விளக்கியுள்ளது. புதிய அமைப்பு எப்படி செயல்படுக்கிறது என்பது பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.
வேலை செய்யும் விதம்
இப்பகுதியில் வாகனங்கள் வந்ததும் சென்சார்கள் மற்றும் தரை கேமராக்கள் (சுமார் 1.5 அடி உயரம்) உங்கள் வாகனத்தைக் கண்டறியும். நீங்கள் பார்க்கிங் மீட்டரைத் தேடவோ அல்லது ஆப் அல்லது SMS மூலம் விவரங்களை உள்ளிடவோ தேவையில்லை. கேமராக்கள் தானாகவே உங்கள் வாகனத்தின் உரிமத் தகட்டைப் படித்து வருகை நேரத்தைப் பதிவு செய்கின்றன.
வாகனங்கள் சாலைக்கு இணையாக நிறுத்தப்படுகின்றன, இதன் மூலம் கேமராக்கள் முன் மற்றும் பின் தகடுகள் இரண்டையும் படம்பிடிக்கின்றன. இதனால் டிக்கெட்டுகள் அல்லது தடைகள் இல்லாமல், கேமராக்கள் தானாகவே உங்கள் பார்க்கிங் அமர்வைப் பதிவுசெய்கின்றன, இதனால் டிக்கெட்டுகளை இழக்கும் அல்லது கட்டண வரிசையில் காத்திருக்கும் சிரமத்தை நீக்குகின்றன.
இதற்கு எவ்வளவு செலவாகும்?
கிழக்கு கிரசென்ட்டில் பார்க்கிங் கட்டணம் ஒரு மணி நேரத்திற்கு 10 திர்ஹம் ஆகும், மேலும் இந்த அமைப்பு 24/7 இயங்குகிறது. பார்கோனிக் வலைத்தளம், QR குறியீடு மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தலாம் அல்லது அந்தப் பகுதியில் அமைந்துள்ள கட்டணச் சாவடிகளில் அல்லது கிரெடிட் கார்டு மூலமாகவும் பணம் செலுத்த முடியும். ஓட்டுநர்களுக்கு உதவ இந்தப் பகுதியில் பார்கோனிக் ஊழியர்களும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏதேனும் விசாரணைகளுக்கு, பார்கோனிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ள சேனல்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்:
- அழைப்பு மையம்: 800-பார்கோனிக் (800-72756642)
- மின்னஞ்சல்: helpdesk@parkonic.com
தடையற்ற AI-இயங்கும் பார்க்கிங் அமைப்பு
இதற்கிடையில், பார்கோனிக் கடந்த மாதம் துபாய் ஹார்பரில் “தடை இல்லாத, AI-இயங்கும் பார்க்கிங் அமைப்பை” செயல்படுத்துவதாக அறிவித்தது. ஓட்டுநர்களின் சாலிக் கணக்குகளில் இருந்து தானியங்கி கட்டண விலக்குகளை அனுமதிக்க பார்கோனிக் சாலிக் உடன் கூட்டு சேர்ந்துள்ளது.
மேலும் பார்கோனிக் அதன் பார்க்கிங் தீர்வுகளை அல் அவீர், அல் வர்கா, நாட் அல் ஹமர், அல் குவோஸ், அல் த்வார், உம் சுகீம், மோட்டார் சிட்டி, சிலிக்கான் ஒயாசிஸ், அல் பர்ஷா மற்றும் அல் வாஸ்ல் ஆகிய இடங்களில் உள்ள கடைகள் உட்பட UAE முழுவதும் பல இடங்களுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக புதன்கிழமை அறிவித்தது, இதில் யூனியன் கூப் கடைகள் மற்றும் குளோபல் வில்லேஜ் மற்றும் JBR போன்ற பிரபலமான இடங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பார்கோனிக் மற்றும் சாலிக் இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தம் கடந்த ஆண்டு நவம்பரில் கையெழுத்தானது. ஐந்தாண்டு ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ், பார்கோனிக் தற்போதைய மற்றும் எதிர்கால இடங்களில் அதன் வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான கட்டண சேனலாக சாலிக்கை ஊக்குவிக்கும். சாலிக் இ-வாலட் மூலம் கிடைக்கும் பார்க்கிங் வருவாயில் ஒரு சதவீதத்தை சாலிக்கிற்கு பார்கோனிக் வழங்கும். இந்த ஒப்பந்தம் அமீரகம் முழுவதும் பார்கோனிக்கின் 135,000 க்கும் மேற்பட்ட பார்க்கிங் இடங்களை உள்ளடக்கும் என்று கூறப்படுகிறது.
எப்படி வேலை செய்கிறது?
கார் மாடல் மற்றும் உரிமத் தகட்டை ஸ்கேன் செய்யும் மேம்பட்ட AI ஐப் பயன்படுத்தி, வாகனங்கள் வந்தவுடன் பார்கோனிக்கின் பார்க்கிங் அமைப்பு உடனடியாகக் கண்டறியும். மேலும், எந்தவித கைமுறையான உள்ளீடும் இல்லாமல் ஒரு மெய்நிகர் பார்க்கிங் டிக்கெட் தானாகவே உருவாக்கப்படும்.
இயல்பாகவே, சாலிக் உடன் கட்டணங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன, ஆனால் பயனர்கள் QR குறியீடு, SMS, கியோஸ்க், மொபைல் பயன்பாடு, வலை போர்டல் அல்லது Tap&Go உள்ளிட்ட பல்வேறு கட்டண முறைகளிலிருந்தும் தேர்வு செய்யலாம். தற்போது பார்கோனிக், துபாயில் குளோபல் வில்லேஜ், தி பீச் – ஜேபிஆர், துபாயில் உள்ள சென்ட்ரல் பார்க் போன்ற பிரபலமான இடங்களிலும், அபுதாபி, ஷார்ஜா மற்றும் ஃபுஜைராவில் உள்ள பல இடங்களிலும் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel