ஐக்கிய அரபு அமீரகத்தில் குளிரான வானிலை நிலவி வந்த பட்சத்தில் கடந்த ஓரிரு ஆட்களாக வெப்பநிலை சற்றே அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்நிலையில் ஒரே நாளில் பகலும் இரவும் சமமாக இருக்கும் தேதியை அமீரக வானிலை மையம் அறிவித்துள்ளது.
இரவும் பகலும் சமமாக இருக்கும் காலத்தையும் வசந்த காலத்தின் தொடக்கத்தையும் குறிக்கும் சம பகல்-இரவு நாள் (March equinox), ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நிலவும் என்று எமிரேட்ஸ் வானியல் சங்கம் அறிவித்துள்ளது. அதாவது, மார்ச் 11 ஆம் தேதி, பகலும் இரவும் சரியாக 12 மணி நேரம் நீடிக்கும். இது மார்ச் மாதத்தில் வசந்த காலத்தின் தொடக்கத்தையும் மற்றும் வெப்பமான, நீண்ட பகல் நேரத்தின் தொடக்கத்தையும் குறிக்கும் என கூறப்பட்டுள்ளது.
எமிரேட்ஸ் வானியல் சங்கத்தின் தலைவர் இப்ராஹிம் அல் ஜர்வான், எமிரேட்ஸ் செய்தி நிறுவனத்திற்கு (WAM) அளித்த பேட்டியில் வரவிருக்கும் வானியல் நிகழ்வுகள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் சம பகல் இரவு தினத்தை பகிர்ந்து கொண்டதோடு முழு சந்திர கிரகணம் மற்றும் பகுதி சூரிய கிரகணம் இரண்டு முக்கிய நிகழ்வுகளைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட விபரங்களின் படி, முழு சந்திர கிரகணம் மார்ச் 14, 2025 அன்று இரவு 05:09 முதல் 08:48 UTC வரை நிகழும். இந்த கிரகணம் முழு நிலவுடன் ஒத்துப்போகும் மற்றும் அமெரிக்காவில் தெரியும், ஆனால் UAE அல்லது அரேபிய தீபகற்பத்தில் தெரியாது.
பின்னர், மார்ச் 29, 2025 அன்று, ஒரு பகுதி சூரிய கிரகணம் ஏற்படும். இது அமீரக நேரப்படி 14:58 மணிக்கு நிகழும், அதே நேரத்தில் ஷவ்வாலுக்குப் பிறை நிலவும் பிறக்கும். வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் வட துருவத்தின் சில பகுதிகளில் சூரிய கிரகணம் தெரியும், ஆனால் அமீரகம் அல்லது அரேபிய தீபகற்பத்தில் தெரியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel