துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) சாலைகளில் போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்துவதற்கும் துபாயின் விரைவான வளர்ச்சியை ஆதரிப்பதற்கும் ஒரு பெரிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சுமார் 798 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில் மேற்கொள்ளப்படும் அல் குத்ரா ஸ்ட்ரீட் மேம்பாட்டு திட்டம், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் இருவருக்கும் சாலைகளில் இயக்கத்தை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது, இது நகரத்தின் விரிவடைந்துவரும் மக்கள்தொகையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டம் தொடர்பாக RTA வெளியிட்டுள்ள தகவல்களில், இந்த வளர்ச்சி திட்டம் அல் குத்ரா ஸ்ட்ரீட்டில் பயண நேரத்தை 9.4 நிமிடங்களிலிருந்து வெறும் 2.8 நிமிடங்களாகக் குறைக்கும் மற்றும் முக்கிய பகுதிகளில் சுமார் 400,000 பேருக்கு பயனளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஷேக் முகமது பின் சையத் சாலையுடன், ஷேக் சையத் பின் ஹம்தான் அல் நஹ்யான் ஸ்ட்ரீட் வழியாக, எமிரேட்ஸ் சாலையில் வரை பெரிய உள்கட்டமைப்பு மேம்பாடுகள் அடங்கும். இந்த வளர்ச்சி திட்டத்தில் புதிய பரிமாற்றங்கள், 2,700 மீட்டர் பாலங்கள் மற்றும் 11.6 கிலோமீட்டர் சாலை விரிவாக்கம் போன்ற பல மேம்பாடுகள் உள்ளன என கூறப்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சியில் பங்களிப்பு
இந்த திட்டமானது அரேபியன் ஃபார்ம்ஸ் 1 மற்றும் 2, துபாய் மோட்டார் சிட்டி, துபாய் ஸ்டுடியோ சிட்டி, அகோயா, முடோன், டமாக் ஹில்ஸ், மற்றும் சஸ்டைனபில் சிட்டி உள்ளிட்ட பல முக்கிய மேம்பாட்டுப் பகுதிகளுக்கு சேவை செய்வதோடு மட்டுமல்லாமல், இந்த பகுதிகளில் பொருளாதார வளர்ச்சியையும் ஆதரிக்கும் என்றும் RTA நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவர் இயக்குநர் ஜெனரல் மட்டர் அல் டேயர் திட்டத்தின் மூலோபாய முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளார். அதே சமயம், இது அல் கத்ரா சிட்டி மற்றும் எமிரேட்ஸ் சாலைக்கு எளிதான இணைப்புகளை வழங்குவதன் மூலம், சாலை பாதுகாப்பு தரங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
முக்கிய மேம்பாடுகள்
திட்டத்தின் ஒரு குறிப்பிடத்தக்க மேம்படுத்தல் என்பது அரேபியன் ஃபார்ம்ஸ் மற்றும் துபாய் ஸ்டுடியோ சிட்டிக்கு இடையிலான சாலையுடன் கூடிய இன்டர்செக்ஷனை மேம்படுத்துவது ஆகும், இது புதிய 600 மீட்டர் பாலத்தால் மேம்படுத்தப்படும். இந்த பாலம் ஒவ்வொரு திசையிலும் நான்கு பாதைகளைக் கொண்டிருக்கும். இதன் மூலம் சாலை திறன் மணிக்கு 6,600 முதல் 19,200 வாகனங்கள் வரை அதிகரிக்கும். இந்த இன்டர்செக்ஷனில் காத்திருக்கும் நேரம் 113 வினாடிகளில் இருந்து 52 வினாடிகளாக குறையும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
இவை தவிர, அல் குத்ரா ஸ்ட்ரீட் மற்றும் ஷேக் சையத் பின் ஹம்தான் அல் நஹ்யான் ஸ்ட்ரீட் ஆகியவற்றின் இன்டர்செக்ஷனை மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் மற்றொரு பெரிய மாற்றம் ஆகும். இதில் 700 மீட்டர் பாலத்தில் இரு திசைகளிலும் ஏழு பாதைகள் உள்ளன. இந்த மேம்படுத்தல் இன்டர்செக்ஷன் திறனை ஒரு மணி நேரத்திற்கு 7,800 லிருந்து 19,400 வாகனங்கள் வரை அதிகரிக்கும், காத்திருப்பு நேரங்களை 393 வினாடிகளிலிருந்து 60 வினாடிகளாக குறைக்கும் என்று அல் தயர் தெரிவித்துள்ளார்.
கூடுதலாக, புதிய பாலங்கள் அல் குத்ரா ஸ்ட்ரீட்டில் இருந்து ஜெபல் அலி, டவுன்டவுன் துபாய் மற்றும் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்தும் என்றும் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இணைப்பை விரிவுபடுத்துதல்
முக்கிய இன்டர்செக்ஷன்களின் மேம்பாடுகளுக்கு அப்பால், இந்த திட்டம் அல் குத்ரா ஸ்ட்ரீட்டை எமிரேட்ஸ் சாலைக்கு நீட்டிக்கும் என்றும், டவுன் ஸ்கொயர், மிரா மற்றும் டமாக் ஹில்ஸுடனான இணைப்புகளை மேம்படுத்துகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த வளர்ந்து வரும் குடியிருப்பு சமூகங்களில் போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்துவதற்காக சாலை 3.4 கிலோமீட்டர் தொலைவில் விரிவாக்கப்படும் என்று RTA தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டத்தின் எதிர்கால கட்டமானது வளர்ச்சி மண்டலத்தின் தெற்குப் பகுதியை எமிரேட்ஸ் சாலையுடன் இணைக்கும் 4.8 கிலோமீட்டர் சாலையைச் சேர்க்கும் என்றும், இந்த கட்டம் எமிரேட்ஸ் சாலையில் உள்ள பாதைகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் என்றும் அதிகாரி தெரிவித்துள்ளார். அதிகாரியின் கூற்றுப்படி, துபாயின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், நகரத்தின் வளர்ந்து வரும் சுற்றுப்புறங்களில் மென்மையான பயணத்தை உறுதி செய்வதற்கும் அல் குத்ரா ஸ்ட்ரீட் மேம்பாட்டு திட்டம் ஒரு முக்கியமான படியாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel