துபாயில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த கடுமையான போக்குவரத்து சட்டங்கள் அமலில் உள்ளன. மேலும், சாலைப் பாதுகாப்பைப் பராமரிக்க துபாய் காவல்துறை தங்கள் அமலாக்க நடவடிக்கைகளை மேம்படுத்தியுள்ளது. அந்த வகையில் துபாய் எமிரேட் முழுவதும் போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிய AI தொழில்நுட்பம் மற்றும் ஸ்மார்ட் அமைப்புகளைப் பயன்படுத்துகிறது.
இந்நிலையில், துபாய் காவல்துறையின் ஸ்மார்ட் கண்டறிதல் அமைப்பானது (smart detection system) கடுமையான போக்குவரத்து விதிமீறலைக் கண்டறிந்துள்ளது. அதில் ஒரு ஓட்டுநர் குழந்தையை தனது மடியில் உட்கார வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டியதை ஸ்மார்ட் அமைப்பு கண்டுபிடித்துள்ளது. இதனை கண்டறிந்த காவல்துறை அதிகாரிகள் அவரது காரை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த பொறுப்பற்ற செயல் குழந்தையின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிப்பது மட்டுமல்லாமல், சட்டரீதியான விளைவுகளையும் ஏற்படுத்துவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் கூட்டாட்சி போக்குவரத்து சட்டத்தின்படி, 10 வயதுக்குட்பட்ட மற்றும் 145 செ.மீ க்கு குறைவான உயரம் கொண்ட குழந்தைகள் முன் இருக்கையில் அமர அனுமதிக்கப்படுவதில்லை.
அத்துடன், வாகன ஓட்டியின் உயிருக்கோ அல்லது மற்றவர்களின் உயிருக்கோ அல்லது அவர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கோ ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனத்தை ஓட்டுவது 2,000 திர்ஹம்ஸ் அபராதம் மற்றும் 23 கருப்பு புள்ளிகள் மற்றும் 60 நாட்களுக்கு வாகனத்தை பறிமுதல் செய்யும் தண்டனைக்குரிய விதிமீறலாகும்.
எனவே, துபாய் காவல்துறை அனைத்து ஓட்டுநர்களையும் தங்களையும் மற்றவர்களையும் பாதுகாக்க சாலை பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற நினைவூட்டுகிறது. கூடவே அனைவருக்கும் சாலைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் வகையில், ஆபத்தான வாகனம் ஓட்டுவது குறித்து அதிகாரப்பூர்வ சேனல்கள் மூலம் புகாரளிக்குமாறும் துபாய் காவல்துறை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel