துபாயில் அமைந்துள்ள இன்ஃபினிட்டி பிரிட்ஜில் இருந்து அல் மினா ஸ்ட்ரீட் வழியாக ஷேக் ரஷீத் சாலை மற்றும் ஷேக் கலீஃபா பின் சையத் ஸ்ட்ரீட் இன்டர்செக்ஷன் வரை போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்துவதற்காக ஞாயிற்றுக்கிழமை துபாயில் ஒரு புதிய பாலம் திறக்கப்பட்டதாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது.
மூன்று பாதைகளைக் கொண்டுள்ள இந்த பாலம் 1,210 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் மணிக்கு 4,800 வாகனங்களை அனுமதிக்கும் திறன் கொண்டது என்பதையும் ஆணையம் வெளிப்படுத்தியுள்ளது. அல் ஷிந்தகா காரிடார் மேம்பாட்டுத் திட்டத்தின் 4 ஆம் கட்டத்தின் ஒரு பகுதியாக திறக்கப்பட்டுள்ள இந்த பாலம், அல் ஹுதைபா, அல் ரஃபா, அல் ஜாஃபிலியா, அல் மன்கூல், அல் கிஃபாஃப் மற்றும் அல் கராமா போன்ற முக்கிய பகுதிகளுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று RTA நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவரும், இயக்குநர் ஜெனரலுமான மட்டார் அல் தயெர் கூறியுள்ளார்.
ஷேக் ரஷீத் சாலையில் 4.8 கி.மீ. நீளம் கொண்ட இந்த அல் ஷிந்தகா காரிடார் மேம்பாட்டுத் திட்டத்தில் மொத்தம் 3.1 கி.மீ. நீளமுள்ள ஐந்து பாலங்கள் கட்டப்படும், அனைத்து பாதைகளிலும் மணிக்கு 19,400 வாகனங்கள் இணைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கடந்த டிசம்பரில், ஷேக் கலீஃபா பின் சயீத் ஸ்ட்ரீட்டில் இருந்து அல் மினா ஸ்ட்ரீட் நோக்கி போக்குவரத்தை மேம்படுத்த RTA 1,335 மீட்டர் நீளம், மூன்று பாதைகள் மற்றும் மணிக்கு 4,800 வாகனங்கள் செல்லக்கூடிய பாலத்தை திறந்தது. அதே போன்று கூடுதலாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் இரண்டு பாதைகள் மற்றும் மணிக்கு 3,200 வாகனங்கள் செல்லக்கூடிய 605 மீட்டர் பாலமும் திறக்கப்பட்டது, இது இந்தப் பகுதியில் போக்குவரத்து இயக்கத்தை மேம்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்பொழுது மூன்றாம் பாலம் திறக்கப்பட்டிருக்கின்றது.
அல் ஷிந்தகா காரிடார் திட்டம், தேரா மற்றும் பர் துபாய் இடையேயான இணைப்பை மேம்படுத்துவதையும், துபாய் ஐலேண்ட்ஸ், தேரா வாட்டர்பிரண்ட், துபாய் மெரிடைம் சிட்டி மற்றும் போர்ட் ரஷீத் போன்ற முக்கிய மேம்பாடுகளை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
RTA-வானது, இத்திட்டத்தின் 4 ஆம் கட்டத்தின் 90% பணிகளை முடித்துள்ளது, மீதமுள்ள இரண்டு பாலங்கள் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் முடிந்ததும், இது சுமார் ஒரு மில்லியன் குடியிருப்பாளர்களுக்கு பயனளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன், 2030 ஆம் ஆண்டளவில் பயண நேரத்தை 104 நிமிடங்களிலிருந்து 16 நிமிடங்களாகக் குறைக்கும், மேலும் அடுத்த 20 ஆண்டுகளில் திர்ஹம் 45 பில்லியன் பொருளாதார நன்மைகளைக் கொண்டுவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel