ADVERTISEMENT

அமீரகத்தில் புழக்கத்திற்கு வந்துள்ள புதிய 100 திர்ஹம் நோட்… புதிய சிறப்பம்சங்கள் என்ன..??

Published: 26 Mar 2025, 8:56 AM |
Updated: 26 Mar 2025, 8:57 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் UAE மத்திய வங்கி (CBUAE) பாலிமரால் ஆன புதிய 100 திர்ஹம்ஸ் பேங்க்நோட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மேம்பட்ட வடிவமைப்புகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. புதிய  பேங்க்நோட் மார்ச் 24 முதல் புழக்கத்திற்கு வந்துள்ள நிலையில் ஏற்கனவே உள்ள 100 திர்ஹம்ஸ் நோட்டுடன் இது புழக்கத்தில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து, புதிய மற்றும் ஏற்கனவே உள்ள நோட்டுகளை ஏற்றுக்கொள்ள வங்கிகள் மற்றும் பரிமாற்ற நிறுவனங்கள் தங்கள் இயந்திரங்களை புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. CBUAEஇன் கவர்னர் கலீத் முகமது பலமா, புதிய 100 திர்ஹம்ஸ் நோட்டு நிலையான எதிர்காலத்திற்கான நாட்டின் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கிறது என்றும் அதன் கலாச்சார மற்றும் வரலாற்று பாரம்பரியத்தை மதிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

வடிவமைப்பு சிறப்பம்சங்கள்:

நோட்டின் வடிவமைப்பில் அமீரக ​​தேசிய பிராண்ட் அடங்கும் மற்றும் மேம்பட்ட அச்சிடும் நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய நோட்டு பல்வேறு பின்வரும் தனித்துவமான வடிவமைப்புகளைக் கொண்டுள்ளது. அவை:

ADVERTISEMENT

  • புதிய திர்ஹம் நோட்டின் முன்புறம் அமீரகத்தின் பாரம்பரியத்தை குறிக்கும் உம் அல் குவைன் தேசிய கோட்டையைக் (National Fort) காட்டுகிறது.
  • பின்புறம், நாட்டின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றான ஃபுஜைரா துறைமுகம் (Port of Fujairah) மற்றும் ஒரு முக்கிய கடல்சார் மையம் இடம்பெற்றுள்ளது.
  • மேலும், ஏழு எமிரேட்களையும் இணைத்து மற்ற வளைகுடா நாடுகளுக்கு இணைப்பை வழங்கும் எதிஹாட் ரயில் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்:

CBUAE இன் மூன்றாவது தேசிய நாணய வெளியீட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டுள்ள புதிய நோட்டில் ‘SPARK Flow DIMENSIONS’ மற்றும் ‘KINEGRAM COLORS’ போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்கள் சிறந்த பாதுகாப்பிற்காகவும் கள்ளநோட்டுகளைத் தடுக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

ADVERTISEMENT

அதுமட்டுமில்லாமல், பார்வையற்றோர் மற்றும் பார்வைக் குறைபாடுள்ள பயனர்கள் நோட்டின் மதிப்பை அடையாளம் காண உதவும் வகையில் ‘பிரெய்லி சின்னங்கள் (Braille symbols)’ சேர்க்கப்பட்டுள்ளன. பாலிமர் நோட்டுகள் நீண்ட காலம் நீடிக்கும் மற்றும் காகித நோட்டுகளை விட நிலையானவை என்பது முக்கிய சிறப்பம்சமாகும். CBUAE முன்பு அதன் 500 திர்ஹம்ஸ் மற்றும் 1,000 திர்ஹம்ஸின் சிறந்த பாலிமர் நோட்டுகளுக்கு விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel