ADVERTISEMENT

UAE: ராஜினாமா செய்த ஊழியரை 3 மாத நோட்டீஸ் பீரியட் வழங்குமாறு முதலாளி நிர்பந்திக்க முடியுமா.? சட்டம் சொல்வது என்ன.?

Published: 13 Mar 2025, 10:37 AM |
Updated: 13 Mar 2025, 10:37 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தைத் தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் அவரது வேலையை ராஜினாமா செய்த பின்னர், வேலை ஒப்பந்ததத்தின் படி அறிவிப்பு காலத்தில் (notice period) பணியாற்றுமாறு முதலாளி கோரலாமா? இது சட்டப்பூர்வமானதா? இத்தகைய சூழலில் ஊழியர் என்ன செய்ய வேண்டும்? என தற்போதைய வேலையிலிருந்து வெளியேறி புதிய வேலையில் சேரத் திட்டமிடும் அனைத்து ஊழியர்களுக்கும் இதுபோன்ற கேள்விகள் இருக்கலாம்.

ADVERTISEMENT

அதற்கு முதலில் அறிவிப்பு காலம் பற்றி ஐக்கிய அரபு அமீரகத் தொழிலாளர் சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். UAE தொழிலாளர் சட்டத்தின் கீழ், முதலாளிகள் மற்றும் ஊழியர்கள் இருவருக்கும் அறிவிப்பு காலம் குறித்து தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. அது குறித்த விபரங்களை இங்கே நாம் காணலாம்.

2021 ஆம் ஆண்டின் 33 ஆம் எண் கூட்டாட்சி ஆணை சட்டத்தின் பிரிவு 43 இன் படி, “ஒரு வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் உள்ள தரப்பினர், மற்றவருக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிப்பை வழங்குவதன் மூலம் ஒப்பந்தத்தை நிறுத்தலாம். அறிவிப்பு காலம் 30 நாட்களுக்குக் குறையாமலும் 90 நாட்களுக்கு மிகாமலும் ஒப்பந்தத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட அறிவிப்பு காலத்தில் ஊழியர் தனது கடமைகளைச் செய்ய வேண்டும்.”

ADVERTISEMENT

எனவே, அமீரகத்தில் ஒரு வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தை நிறுத்த விரும்பும் ஒரு முதலாளி அல்லது ஊழியர், வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிட்ட அறிவிப்பு காலத்தை நிறைவேற்ற வேண்டும். இருப்பினும், ஒரு முதலாளி மற்றும் ஒரு ஊழியர் அறிவிப்பு காலத்தைக் குறைக்க ஒப்புக் கொள்ளலாம். எனினும் அறிவிப்பு காலம் தொடர்பான ஒரு ஊழியரின் சம்பளம் உட்பட அவரது உரிமைகளை ஒரு முதலாளி செலுத்த வேண்டும். இது வேலைவாய்ப்புச் சட்டத்தின் பிரிவு 43(2)க்கு இணங்க உள்ளது.

உங்கள் முதலாளி ஒப்புக்கொண்டால், நீங்கள் குறுகிய அறிவிப்பு காலத்துடன் தொடரலாம். அதுவே வேலை ஒப்பந்தத்தின் படி, உங்கள் முதலாளி மூன்று மாத அறிவிப்பு காலத்தை வலியுறுத்தினால், நீங்கள் முன்னதாகவே வெளியேறுவதற்கு “அறிவிப்புக்குப் பதிலாக ஊதியம் (pay in lieu of notice)” மூலம் ஈடுசெய்ய வேண்டியிருக்கும், அதாவது உங்கள் அறிவிப்பின் மீதமுள்ள காலத்திற்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டியிருக்கும். இது வேலைவாய்ப்புச் சட்டத்தின் பிரிவு 43(3) இன் படி உள்ளது.

ADVERTISEMENT

அதாவது, அறிவிப்பு காலத்தை கடைபிடிக்காத தரப்பினர் மற்ற தரப்பினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும், இது அறிவிப்பு காலத்திற்குப் பதிலாக ஊதியம் என்று அழைக்கப்படுகிறது, அறிவிப்பு இல்லாதது மற்ற தரப்பினருக்கு சேதத்தை ஏற்படுத்தாவிட்டாலும் கூட, இழப்பீடு முழு அறிவிப்பு காலத்திற்கு அல்லது அதன் மீதமுள்ள பகுதிக்கு தொழிலாளியின் ஊதியத்திற்கு சமமாக இருக்க வேண்டும் என வேலைவாய்ப்புச் சட்டத்தின் பிரிவு 43(3) கூறுகிறது.

இதற்கு மாறாக, வேலை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட நாட்களை விடவும் நீண்ட அறிவிப்பு காலத்தை, அதாவது ஒரு மாத அறிவிப்பு காலம் ஒப்பந்தித்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பட்சத்தில் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் அறிவிப்பு காலம் வழங்குமாறு முதலாளி வலியுறுத்தினால், அல்லது இது குறித்து ஏதேனும் கருத்து வேறுபாடு இருந்தால், நீங்கள் மனிதவளம் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகத்தில் (MoHRE) புகார் அளிக்கலாம்.

எனவே, சுருக்கமாக, சட்டப்பூர்வமான அறிவிப்பு காலம் 90 நாட்கள் வரை இருக்கலாம், மேலும் நீங்களும் உங்கள் முதலாளியும் பரஸ்பரம் அதை மாற்றியமைக்க ஒப்புக் கொள்ளாவிட்டால், உங்கள் ஒப்பந்தத்தில் உள்ள அறிவிப்பு காலத்தை நீங்கள் மதிக்க வேண்டும். அறிவிப்பு காலத்தை குறைக்க விரும்பினால், நீங்கள் வேலை செய்யாத நேரத்திற்கு உங்கள் முதலாளிக்கு இழப்பீடு வழங்குவதை பரிசீலிக்கலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel