அமீரகத்தில் வெறும் மூன்று நாட்களில் 14,000 திர்ஹம் வரை வசூலித்த ஒரு பிச்சைக்காரர் காவல்துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சிறப்புப் பணித் துறையின் (Special Tasks Department) கீழ் பிச்சை எடுப்பதற்கு எதிரான குழுவால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரமலான் தொடக்கத்தில் ஷார்ஜா காவல்துறையினரால் தொடங்கப்பட்ட “Begging is a crime, and giving is a responsibility” என்ற தலைப்பிலான விழிப்புணர்வு பிரச்சாரம், இந்தப் பிரச்சினையை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாக கொண்டுள்ளது. பிச்சைக்காரர்கள் மற்றும் சட்டவிரோத தெரு வியாபாரிகளை, குறிப்பாக பிச்சை எடுப்பதை குறிப்பிட்ட காலத்திற்கு தொழிலாக மாற்றுபவர்களைக் கைது செய்ய, இந்த துறை ரோந்துப் பணிகளை அதிகரித்துள்ளது.
இது ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் ரமலான் மாதத்தில் சட்டவிரோதமாக பிச்சை எடுப்பது தொடர்பாக நடந்து வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். புனித மாதம் தொடங்கியதில் இருந்து சட்ட அமலாக்க அதிகாரிகள் விழிப்புணர்வு திட்டங்களை அதிகரித்து இது போன்று பல கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர் மசூதிக்கு அருகில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்திருக்கிறார். அந்த நபர் குறித்து ஒரு சமூக உறுப்பினர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கு ஒரு போலீஸ் ரோந்துப் படை அனுப்பப்பட்டு அவரைக் கைது செய்ததாகக் கூறப்படுகின்றது. அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட விசாரணையில், அந்த நபர் சட்டவிரோதமாக நாட்டில் வசித்து வந்ததும், மூன்று நாட்களில் பிச்சை எடுத்ததன் மூலம் 14,000 திர்ஹம் சம்பாதித்ததும் தெரியவந்துள்ளது.
இது குறித்து சிறப்புப் பணித் துறையின் இயக்குனர் டீன் அல் ரகான் உமர் கசல் அல் ஷம்சி அவர்கள் பேசுகையில், பிச்சை எடுப்பது என்பது பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தும் ஒரு எதிர்மறையான சமூக நிகழ்வு என்று வலியுறுத்தியுள்ளார். பல பிச்சைக்காரர்கள் சட்டவிரோத வருமானத்தை ஈட்ட மக்களின் இரக்கத்தைப் பயன்படுத்தி மோசடி செய்கிறார்கள் என்று எடுத்துரைத்துள்ளார்.
எனவே, பிச்சைக்காரர்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என்றும், 80040 என்ற கட்டணமில்லா எண் அல்லது 901 என்ற அழைப்பு மையத்தை அழைப்பதன் மூலம் வழக்குகளைப் புகாரளிக்குமாறும் பொதுமக்களை அதிகாரம் வலியுறுத்தியுள்ளது. அபுதாபி மற்றும் துபாயிலும் பிச்சை எடுப்பவர்களுக்கு எதிராக இதேபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel