ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அரசாங்க மனிதவளத்திற்கான கூட்டாட்சி ஆணையம், நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை ஊழியர்களுக்கான ஈத் அல் பித்ர் விடுமுறை தேதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், இஸ்லாமிய நாட்காட்டியின்படி, ஈத் அல் பித்ர் விடுமுறை ஷவ்வால் 1 ஆம் தேதி தொடங்கி ஷவ்வால் 3, ஹிஜ்ரி 1446 அன்று முடிவடையும். பின்னர் ஷவ்வால் 4 அன்று அதிகாரப்பூர்வ வேலை நாட்கள் மீண்டும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, இஸ்லாமிய மாதங்கள் 29 அல்லது 30 நாட்கள் நீடிக்கும். மேலும் ஈத் அல் பித்ர் ஷவ்வால் 1 அன்று கொண்டாடப்படுகிறது, இது புனித ரமலான் மாதத்தின் முடிவைக் குறிக்கிறது. எனவே, விடுமுறை நாட்களின் சரியான தேதிகள் மார்ச் 29 அன்று நடைபெற உள்ள பிறை பார்க்கும் நிகழ்வைப் பொறுத்து ஆங்கில மாத தேதிகள் உறுதிசெய்யப்படும்.
அதாவது, மார்ச் 29 அன்று பிறை நிலவு தென்பட்டால், ஈத் அல் பித்ர் ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 30 அன்று கொண்டாடப்படும். இந்த நிலையில், அரசு ஊழியர்கள் மார்ச் 29 சனிக்கிழமை முதல் ஏப்ரல் 1 செவ்வாய் வரை நான்கு நாள் விடுமுறையைப் பெறுவார்கள், ஏனெனில் சனிக்கிழமை நாட்டில் உள்ள பெரும்பாலான அரசு தொழிலாளர்களுக்கு வார இறுதி விடுமுறை நாளாகும்.
அதுவே, மார்ச் 29 அன்று சந்திரன் தென்படவில்லை என்றால், ரமலான் 30 நாட்கள் நீடிக்கும், மேலும் மார்ச் 31 திங்கள் அன்று ஈத் அல் பித்ர் கொண்டாடப்படும். இதனால் மார்ச் 31 முதல் ஏப்ரல் 2 வரை மூன்று நாள் ஈத் விடுமுறையாக மாறும், இதன் விளைவாக மார்ச் 29 சனிக்கிழமை தொடங்கி ஏப்ரல் 2 வரை ஐந்து நாள் விடுமுறை கிடைக்கும்.
இதற்கிடையில், ஷார்ஜாவில் பொதுத்துறை ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமையும் வார இறுதி நாள் என்பதால், பிறை பார்ப்பதை பொருத்து சில அரசு ஊழியர்கள் ஈத் அல் பித்ருக்கு ஆறு நாட்கள் வரை விடுமுறையை பெறுவார்கள். எனினும், அமீரகத்தின் பிறை பார்க்கும் குழு மார்ச் 29 அன்று முடிவுகளை அறிவித்த பிறகு இறுதி தேதிகள் உறுதிப்படுத்தப்படும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel