ADVERTISEMENT

UAE: ரமலானில் ஒவ்வொரு நாளும் 3,300 இலவச உணவுகளை வழங்கும் புதிய முயற்சி!!

Published: 3 Mar 2025, 3:04 PM |
Updated: 3 Mar 2025, 3:16 PM |
Posted By: Menaka

UAE உணவு வங்கி (UAE Food Bank) மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரிஃபோரை இயக்கும் மஜித் அல் ஃபுத்தைம் ஆகியவை இணைந்து, புனிதமிக்க ரமலான் மாதத்தில் ஒவ்வொரு நாளும் 3,300 க்கும் மேற்பட்ட உணவுகளை வழங்குவதாக ஒரு புதிய முயற்சியை அறிவித்துள்ளது. இந்த புதுமுயற்சி உணவு பாதுகாப்பை ஆதரிப்பதற்கும் UAE உணவு வங்கியின் “1,000 உணவு” திட்டத்தை ஆதரிப்பதற்கும் கேரிஃபோரின் மூலோபாயத்துடன் ஒத்துப்போவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதில் கேரிஃபோர் உணவைத் தயாரிக்கத் தேவையான இறைச்சி மற்றும் மளிகைப் பொருட்களை நன்கொடையாக வழங்குவதன் மூலம் பங்களிக்கும் என்றும், அதே நேரத்தில் UAE உணவு வங்கி, சிறு வணிகங்களுக்கு உதவும் ஒரு நிறுவனமான தயா கலை உற்பத்தியுடன் (Taya Art Production) இணைந்து இஃப்தார் உணவைத் தடையின்றி தயாரிப்பதை உறுதி செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியான விபரங்களின் படி, பிரத்யேக வாகனங்கள் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் முக்கிய இடங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு இந்த உணவு தினமும் விநியோகிக்கப்படும் என்பதும், கேரிஃபோர் ஊழியர்கள் விநியோகத்திற்கு உதவுவார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், இந்த வாகனங்கள் போக்குவரத்து சிக்னல்கள், பஸ் நிறுத்தங்கள் மற்றும் துபாயில் உள்ள மெட்ரோ நிலையங்கள் போன்ற இடங்களில் பேரீச்சம்பழங்கள் மற்றும் தண்ணீரை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து மஜீத் அல் ஃபுத்தைம் சில்லறை விற்பனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் குந்தர் ஹெல்ம் அவர்கள் பேசுகையில்,  ‘Unlock the Spirit of Ramadan’ முயற்சி தேவைப்படும் மக்களுக்கு 100,000 உணவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறியதுடன், சமூகத்தில் ஒற்றுமை மற்றும் ஆதரவை வளர்ப்பதற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் குறிக்கோளுடன் இது எவ்வாறு ஒத்துப்போகிறது என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

UAE உணவு வங்கியின் தலைவரான மனல் பின் யாரூஃப், உணவுக் கழிவுகளை குறைப்பதும், உணவு தேவைப்படுபவர்களை அடைவதை உறுதி செய்வதும் இதன் குறிக்கோள் என்று எடுத்துரைத்துள்ளார். மேலும், ரமலான் மாதத்தில் மிகவும் நிலையான மற்றும் அக்கறையுள்ள சமூகத்தை உருவாக்க கேரிஃபோர் உடனான இந்த ஒத்துழைப்பு உதவுகிறது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel