ADVERTISEMENT

UAE: ரமலான் காலத்தில் உணவு மற்றும் சாலை பாதுகாப்பை மேம்படுத்த தீவிர நடவடிக்கை.!!

Published: 17 Mar 2025, 2:32 PM |
Updated: 17 Mar 2025, 2:32 PM |
Posted By: Menaka

ரமலான் மாதத்தை முன்னிட்டு அமீரகம் முழுவதும் பண்டிகைக்கால விளக்குகள் மற்றும் அலங்காரங்களால் ஒளிரும் அதேவேளையில், ரமலான் மாதத்தில் உணவு சுகாதாரம் முதல் சாலைப் பாதுகாப்பு வரை அமீரகத்தில் வசிக்கக்கூடிய குடியிருப்பாளர்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய அதிகாரிகள் ஆய்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

இது தொடர்பான விதிகள் எமிரேட் முழுவதும் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என கண்டறிய அபுதாபி மற்றும் துபாய் ஏற்கனவே ஆய்வுகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் பண்டிகைக் காலத்தில் பொது பாதுகாப்பை உறுதி செய்ய தற்போது ஃபுஜைரா மற்றும் ஷார்ஜாவில் உள்ள அதிகாரிகளும் கூடுதல் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

ஃபுஜைராவில் உணவு பாதுகாப்பு

சுகாதாரம், சரியான லேபிளிங், நியாயமான விலை நிர்ணயம் மற்றும் உணவுப் பொருட்கள் சுகாதார விதிகளுக்கு இணங்குவதை சரிபார்க்க ஃபுஜைரா முனிசிபாலிட்டியானது உணவகங்கள் மற்றும் உணவு விற்பனை நிலையங்களில் இதுவரை 687 ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதும் சந்தையில் நியாயமான நடைமுறைகளை உறுதி செய்வதும் இந்த முயற்சியின் நோக்கம் என்று ஃபுஜைரா முனிசிபாலிட்டியின் இயக்குநர் ஜெனரல் ஹசன் சலீம் அல் யமாஹி கூறியுள்ளார். கூடுதலாக, புனித மாதத்தில் அதிக தேவையை பூர்த்தி செய்ய ரமலான் சார்ந்த உணவுகள் மற்றும் பொருட்களை விற்கும் கடைகளுக்கு 79 சிறப்பு அனுமதிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஷார்ஜாவில் சாலை பாதுகாப்பு

மற்றொரு பக்கம், ஷார்ஜா போக்குவரத்து காவல்துறையினர் மசூதிகளைச் சுற்றி ரோந்துப் பணிகளை அதிகரித்து வருகின்றனர். குறிப்பாக தொழுகை நேரங்களில், வாகன நிறுத்துமிடங்களை நிர்வகிக்கவும், வழிபாட்டாளர்கள் பாதுகாப்பாக உள்ளேயும் வெளியேயும் செல்வதை உறுதி செய்யவும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

மேலும், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை ஏற்படுத்தும் சட்டவிரோத வாகன நிறுத்துமிடங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். குறிப்பாக இஃப்தார் நேரத்தில், பலர் வீட்டிற்கு விரைந்து சென்று தெருக்களைக் கடக்கும் போது, ​​வாகன ஓட்டிகள் கவனமாக வாகனம் ஓட்டுமாறு காவல்துறை அதிகாரிகள் அறிவுறை வழங்கியுள்ளனர்.

இது குறித்து ஷார்ஜா காவல்துறையின் போக்குவரத்து மற்றும் ரோந்துத் துறையின் இயக்குனர் கர்னல் முகமது அலாய் அல் நக்பி செய்தி ஊடகங்களிடம் பேசுகையில், பாதசாரிகள் சம்பந்தப்பட்ட அபாயகரமான விபத்துக்கள் மற்றும் காயங்களைத் தடுக்க சந்தைகள் மற்றும் மால்கள் போன்ற பரபரப்பான பகுதிகளில் ரோந்துப் பணிகள் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel