ADVERTISEMENT

அமீரக தேசிய தினத்தில் பிறர் மீது ஸ்ப்ரே செய்தவர்களை கைது செய்த போலீஸ்..!! அபராதம் விதித்த நீதிமன்றம்..!!

Published: 6 Apr 2025, 12:56 PM |
Updated: 6 Apr 2025, 12:56 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2ம் தேதி தேசிய தின கொண்டாட்டங்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. அதில் ஃபுஜைராவில் நடந்த தேசிய தின கொண்டாட்டங்களின் போது, பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் சோப்பு ஸ்ப்ரேயை தெளித்த 14 நபர்களுக்கு தலா 1,000 திர்ஹம் அபராதம் விதிக்க திப்பா அல் ஃபுஜைரா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

திப்பா பகுதியில் அல் ஃபகீத் எனும் இடத்தில் நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டங்களின் போது ஒரு பொது இடத்தில் ஸ்ப்ரேயை தெளித்ததால் மக்களுக்கு, குறிப்பாக அவர்களின் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும் அபாயம் ஏற்பட்டதாகவும், இதனை நேரில் கண்ட திப்பா அல் ஃபுஜைரா காவல்துறை அந்த நபர்களைக் கைது செய்ததாகவும் கூறப்படுகின்றது.

இது குறித்து ஃபுஜைரா காவல்துறையினால் பதிவு செய்யப்பட்ட வழக்கின் படி, கைது செய்யப்பட்டவர்களில் 12 பேர் வேண்டுமென்றே பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்களைச் செய்ததாகவ குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட மற்ற இருவர்கள் தீங்கு விளைவித்ததாக அந்த இருவர் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

ADVERTISEMENT

நீதிமன்ற விசாரணையின் போது, அந்த நபர்களை கைது செய்த காவல்துறை அதிகாரி, குற்றம்சாட்டப்பட்டவர்கள் மக்கள் மீது சோப்பு தெளிப்பதைக் கண்டதாக சாட்சி அளித்துள்ளார். ஆயினும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் தங்களின் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டாலும், மற்றவர்கள் அவற்றை மறுத்ததாகக் கூறப்படுகின்றது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிரதிவாதிகள் மற்றும் சாட்சிகள் இருவரின் சாட்சியங்களையும் மதிப்பாய்வு செய்தது. இறுதியில் விசாரணை, குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலரின் ஒப்புதல் வாக்குமூலங்கள் மற்றும் பொது பாதுகாப்புக்கு ஏற்படும் ஆபத்தை உறுதிப்படுத்தும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், குற்றச்சாட்டுகள் செல்லுபடியாகும் என்று நீதிமன்றம் கண்டறிந்தது.

ADVERTISEMENT

எனவே, நிரூபிக்கப்பட்ட குற்றங்களுக்கு தண்டனைகளை கட்டாயமாக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 213 இன் கீழ், திப்பா அல் ஃபுஜைரா நீதிமன்றம் ஒவ்வொரு பிரதிவாதிக்கும் 1,000 திர்ஹம் அபராதம் விதித்ததுடன், இந்த வழக்கு விசாரணையில் பொருந்தக்கூடிய அனைத்து நீதிமன்ற கட்டணங்களையும் செலுத்த உத்தரவிட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel