ADVERTISEMENT

துபாயில் கிரெடிட் கார்டு மோசடியில் சிக்கிய டாக்டர்..!! கைவிரித்த வங்கி..!! என்ன நடந்தது?

Published: 4 Apr 2025, 12:31 PM |
Updated: 4 Apr 2025, 12:41 PM |
Posted By: Menaka

துபாயைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் சமீபத்தில், அறுவை சிகிச்சை செய்யும் சமயத்தில் தனது கிரெடிட் கார்டு 14 அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாக புகாரளித்துள்ள சம்பவமானது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது குறித்து விவரிக்கையில் எப்போதும் தனது கிரெடிட் கார்டை தன்னுடன் வைத்திருப்பதாகவும், அதை மொபைல் சாதனத்தில் ஒருபோதும் டிஜிட்டல் மயமாக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

அதாவது, இந்த சம்பவம் நடந்த நாளில் துபாய் மால் மற்றும் ஷார்ஜாவில் உள்ள கடைகள் உட்பட பல்வேறு இடங்களில் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் நடந்ததாகவும், சில பரிவர்த்தனைகள் 10,000 திர்ஹம்ஸை தாண்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மோசடி நடந்தபோது மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் நடுவில் இருந்ததாகக் குறிப்பிட்ட மருத்துவர், தனது கார்டின் இருப்பு தீர்ந்த பிறகும் நான்கு பரிவர்த்தனைகள் நடந்ததாக தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், மோசடி பரிவர்த்தனைகளில் இரண்டு குவைத் தினார்களில் இருந்ததாகவும் கூறிய அவர், எந்த பரிவர்த்தனைகளுக்கும் பேங்கின் தரப்பிலிருந்து OTP (ஒரு முறை கடவுச்சொல்) கோரப்படவில்லை என்பதையும் அவர் கவலையுடன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தன்னால் மோசடியை தடுக்க முடியாமல் போய்விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

வங்கியின் அலட்சியம்

மருத்துவர் தெரிவிக்கையில் ‘முதல் மோசடி பரிவர்த்தனையை வங்கி அறிவித்த போதிலும், அது அவரது கார்டை ப்ளாக் செய்யவோ அல்லது அவரைத் தொடர்பு கொள்ளவோ முயற்சிக்கவில்லை. மோசடி நடந்ததாக சந்தேகித்தால் வங்கி ஏன் தனது கார்டை முடக்கவில்லை’ என்று மருத்துவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மருத்துவரின் கூற்றுப்படி, இந்தப் பிரச்சினையைப் புகாரளித்த பிறகு, சில பரிவர்த்தனைகள் நிலுவையில் இருப்பதாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், மோசடி பரிவர்த்தனைகள் குறித்த விவரங்களை வழங்க வங்கி மறுத்ததாகவும், தனது கோரிக்கைகளை புறக்கணித்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் வங்கி உயரதிகாரிகள் யாரிடமும் அவர்கள் என்னைப் பேச அனுமதிக்கவில்லை. சமூக ஊடகங்களில் தொடர்பு கொண்ட பிறகுதான் வங்கி தன்னைத் தொடர்பு கொண்டது என்று ஆவேசத்துடன் பேசியுள்ளார்.

ADVERTISEMENT

பின்னர் பரிவர்த்தனைகள் ஆப்பிள் பே மூலம் செய்யப்பட்டதாக வங்கி கூறியது என்று கூறிய ஆவர், ஆனால் அவர் தனது கார்டை ஆப்பிள் பேவில் இதுவரை பதிவு செய்யவில்லை என மறுத்துள்ளார். அதேபோல் தனது கார்டு தங்கள் சேவையுடன் இணைக்கப்படவில்லை என்பதையும் ஆப்பிள் உறுதிப்படுத்தியிருக்கின்றது. மருத்துவரைப் பொறுத்த வரை, வங்கி மோசடி என சந்தேகித்தால், அவர்கள் ஏன் தனது கார்டை ப்ளாக் செய்வதற்கு பதிலாக பரிவர்த்தனைகளை தொடர்ந்து அங்கீகரித்தார்கள்? என்ற கேள்வியை முன்வைத்துள்ளார்.

வங்கியின் பதில்

வங்கியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், “மோசடி தொடர்பான கவலைகளை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம், மேலும் எங்கள் வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறோம். வாடிக்கையாளர் ரகசியத்தன்மை காரணமாக தனிப்பட்ட வழக்குகள் குறித்து எங்களால் கருத்து தெரிவிக்க முடியாது என்றாலும், எங்கள் உரிய விடாமுயற்சி செயல்முறை மற்றும் ஒழுங்குமுறை தேவைகளுக்கு ஏற்ப முழுமையான விசாரணைகளை நடத்துகிறோம் என கூறியுள்ளார்.

அத்துடன், வாடிக்கையாளர்களின் கணக்குகளில் விழிப்புணர்வின் முக்கியத்துவம் மற்றும் பரிவர்த்தனைகளைக் கண்காணிப்பது குறித்து நாங்கள் எங்களின் வாடிக்கையாளர்களை தொடர்ந்து தொடர்பு கொள்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், மோசடி கட்டணங்களைத் திருப்பிச் செலுத்த மருத்துவருக்கு 12 மாத தவணைத் திட்டம் வழங்கியதை அவர் நிராகரித்ததுடன், அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளுக்கு தான் பொறுப்பேற்க வேண்டியதில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கிரெடிட் கார்டு மோசடியின் பிரச்சினை

இந்த வழக்கு தனித்துவமானது அல்ல. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மற்ற சில நபர்களும் இதேபோன்ற மோசடி சிக்கல்களை சந்தித்துள்ளனர். OTP சரிபார்ப்பு இல்லாமல் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் செய்யப்பட்டு பண மோசடி செய்யப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். போலி எமிரேட்ஸ் ஐடியைப் பயன்படுத்தி மூன்று கிரெடிட் கார்டுகளை அதிகபட்சமாகப் பயன்படுத்தி மோசடி செய்யப்பட்ட வழக்குகளும் அமீரகத்தில் இடம்பெற்றுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் மோசடி வழக்குகள் அதிகரித்து வருவதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பொதுத்துறை நிறுவனங்கள் தினமும் சுமார் 50,000 அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன, மேலும் நிதி மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் வங்கிகளிடமிருந்து உதவி அல்லது தீர்வுகளைப் பெற சிரமப்படுகிறார்கள். வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை உள்ளது என்றும், மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உரிமைகளைப் புரிந்துகொண்டு இழப்பீட்டு விருப்பங்களை ஆராய சட்ட ஆலோசனையைப் பெற வேண்டும் என்றும் சட்ட வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

இவற்றுடன் வாடிக்கையாளர்களும் தங்களின் தனிப்பட்ட வங்கி விபரங்களை பத்திரமாக வைத்திருக்கவும், ஒழுங்காக சரிபார்க்காமல் இணையதளங்கள் மற்றும் பிற முறைகளில் வங்கி மற்றும் கார்டு விபரங்களை அளிக்க வேண்டாம் எனவும் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் குடியிருப்பாளர்களை அறிவுறுத்தியுள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel