துபாய் சர்வதேச விமான நிலையத்தின் (DXB) டெர்மினல் 1 இல் காணாமல் போன பொருள் குறித்து புகார் கிடைத்த 30 நிமிடங்களுக்குள், துபாய் காவல்துறையினர் 102,000 திர்ஹம்ஸ் ரொக்கம் கொண்ட ஒரு பையை விரைவாகக் கண்டுபிடித்து அதன் உரிமையாளர்களிடம் திருப்பி ஒப்படைத்துள்ள சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்று வருகின்றது.
ஒரு குடும்ப உறுப்பினர் மரணமடைந்த செய்தியைப் பெற்று, வீடு திரும்புவதற்கான விமானத்தை முன்பதிவு செய்ய விரைந்து கொண்டிருந்த இரண்டு குவைத் சகோதரர்கள் அவர்கள் கொண்டு வந்த பையை தற்செயலாக விட்டுச் சென்றுள்ளனர்.
அதிகாரிகள் வெளியிட்ட விபரங்களின் படி, அவர்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முயற்சிக்கும் அவசரத்தில், பணம், பாஸ்போர்ட் மற்றும் பிற தனிப்பட்ட பொருட்கள் அடங்கிய பையை மறந்துவிட்டதை உணராமல் விமானத்தில் ஏறியதாகவும், விமானத்தில் ஏறியவுடன், அவர்கள் தங்களின் பையை மறந்து விட்டதை உணர்ந்து, விமான நிலையத்தில் அவர்களை இறக்கிவிட வந்த தங்கள் சகோதரியிடம் தகவலை தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.
உடனடியாக, அவர்களின் சகோதரி காணாமல் போன பை குறித்து விமான நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதையடுத்து, சிறப்புக் குழுக்கள் அனைத்து அதிகாரப்பூர்வ நடைமுறைகளையும் பின்பற்றி, பையைக் கண்டுபிடித்து, அவர்களிடம் திருப்பித் தரப்படுவதை உறுதிசெய்ய விரைவாகச் செயல்பட்டதாக விமான நிலையப் பாதுகாப்புத் துறையின் பொது இயக்குநர் பிரிகேடியர் ஹமூதா பெல்சுவைதா அல் அமெரி தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற வழக்குகளை திறமையாகவும் துல்லியமாகவும் கையாளும் குழுவின் செயல்திறனை பாராட்டிய அல் அமெரி, தொலைந்து போன பொருட்களை அவற்றின் உரிமையாளர்கள் காணவில்லை என்பதை உணரும் முன்பே அடையாளம் கண்டுள்ளனர் என்று குழுவின் நிபுணத்துவத்தையும் எடுத்துரைத்துள்ளார்.
மேலும், அவர் தொடர்ந்து பேசுகையில், நகர விமான நிலையங்களில் உயர் பாதுகாப்புத் தரங்களைப் பராமரிப்பதற்கும், பயணிகளுக்குத் தடையற்ற பயண அனுபவத்தை உறுதி செய்வதற்கும், துபாயில் அவர்கள் தங்கியிருக்கும் காலத்தில் அவர்களின் வசதியையும் திருப்தியையும் மேம்படுத்துவதற்கும் துபாய் காவல்துறையின் உறுதிப்பாட்டையும் அவர் தெரிவித்துள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel