துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), துபாய் மெட்ரோவுடன் முக்கிய இடங்களை இணைக்கும் வழித்தடமான F13 இல் ஒரு புதிய எலெக்ட்ரிக் பேருந்தை சோதிக்கத் தொடங்கியுள்ளது. இந்த பேருந்து அல் கூஸ் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது மற்றும் புர்ஜ் கலீஃபா, தி பேலஸ் டவுன்டவுன் ஹோட்டல் மற்றும் துபாய் ஃபவுன்டைன் உள்ளிட்ட முக்கிய அடையாளங்களில் நின்று, துபாய் மால் மெட்ரோ பேருந்து நிறுத்தத்தில் (சவுத்) அதன் பயணத்தை முடிக்கும் என்று RTA தெரிவித்துள்ளது.
எலெக்ட்ரிக் பேருந்தின் சிறப்பம்சங்கள்
இந்த எலெக்ட்ரிக் பேருந்தில் நவீன கேமராக்கள், விண்ட்ஸ்கிரீனில் முக்கிய ஓட்டுநர் தகவலைக் காட்டும் ஹெட்-அப் டிஸ்ப்ளே மற்றும் அதிநவீன ஏர் கண்டிஷனிங் அமைப்பு போன்ற மேம்பட்ட அம்சங்கள் நிரம்பியுள்ளன. அதுமட்டுமில்லாமல், இதுவரை RTA-வின் வாகனத் தொகுப்பில் சோதிக்கப்பட்ட வாகனங்களிலேயே மிகப்பெரிய பேட்டரி திறனையும் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 470 kWh சேமிப்பு திறன் கொண்ட உயர்-திறன் பேட்டரிகள் முழு சார்ஜில் 370 கிமீ வரை பயணிக்க அனுமதிக்கிறது. 12 மீட்டர் நீளமுள்ள இந்த வாகனம் 76 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும், 41 இருக்கைகள் மற்றும் 35 பேர் நிற்க இடவசதியை இந்த பேருந்து கொண்டுள்ளது.
இது குறித்து RTA-வின் பொதுப் போக்குவரத்து நிறுவனத்தின் பேருந்துகள் இயக்குநர் மர்வான் அல் ஜரூனி கூறுகையில், எதிர்கால மின்சார பேருந்து வடிவமைப்புகளை வடிவமைக்க, குறிப்பாக துபாயின் தனித்துவமான காலநிலைக்கு உதவும் வகையில், நிஜ உலக பயன்பாட்டிலிருந்து தரவுகளைச் சேகரிப்பதே இதன் குறிக்கோள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த சோதனையின் மூலம், கார்பன் உமிழ்வு குறைப்பு, பேட்டரி செயல்திறன் மற்றும் அதிக பயணிகள் தேவை மற்றும் கோடை வெப்பத்தை கையாளும் பேருந்தின் திறன் ஆகியவற்றை RTA ஆராயும் என்று தெரிவித்துள்ளார்.
2050 ஆம் ஆண்டுக்குள் துபாயில் உள்ள அனைத்து பொது போக்குவரத்தையும் பூஜ்ஜிய உமிழ்வாக மாற்றும் RTA-வின் பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முன்னோடி திட்டம் உள்ளது என்றும், இது ஸ்மார்ட், சுற்றுச்சூழலுக்கு உகந்த பயண தீர்வுகளில் கவனம் செலுத்துகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel