வணிகம், சுற்றுலா மற்றும் உயர்தர வாழ்க்கைக்கான உலகளாவிய மையமாக விளங்கும் துபாயில், உலகம் முழுவதிலுமிருந்து வருகை தரும் புதிய குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையால் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் உயரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையால் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், மக்கள்தொகை முதல் முறையாக 3.914 மில்லியனை எட்டியுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.
துபாய் புள்ளிவிவர மையத் (Dubai Statistics Centre) தரவுகளின்படி, ஜனவரி மற்றும் மார்ச் 2025 க்கு இடையில் மட்டும் எமிரேட்டில் 51,295 குடியிருப்பாளர்கள் அதிகரித்துள்ளனர். இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 52,143 ஆக இருந்தது. இந்த வளர்ச்சி வெளிநாட்டு தொழில் வல்லுநர்கள் மற்றும் மில்லியனர்களின் துபாயின் மீதான நீடித்த ஈர்ப்பை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகக் கூறப்படுகின்றது.
மக்கள்தொகை வளர்ச்சி போக்குகள்:
புள்ளிவிபரங்களின் படி, 2024 ஆம் ஆண்டில், துபாயின் மக்கள்தொகை 169,000 க்கும் அதிகமாக அதிகரித்து 3.825 மில்லியனை எட்டியது, இது 2018 க்குப் பிறகு மிக விரைவான வருடாந்திர அதிகரிப்பாகும்.
மேலும், இதே வேகத்தில் மக்கள்தொகைவளர்ச்சி தொடர்ந்தால், 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிலேயே 4 மில்லியன் மக்கள்தொகை எனும் புதிய மைல்கல்லை துபாய் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையான மக்கள்தொகை உயர்வு, குறிப்பாக ரியல் எஸ்டேட், சில்லறை விற்பனை, உணவு மற்றும் பானங்கள் (F&B), பயணம் மற்றும் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் போன்ற துறைகளில் ஒரு செழிப்பான பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய அளவில் பங்களிக்கும் என்றும் புள்ளிவிபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள்தொகை வளர்ச்சியின் பொருளாதார தாக்கம்:
எமிரேட்ஸ் NBD ஆராய்ச்சியின் படி, ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் அல்லாத பொருளாதாரம் அதன் விரிவடையும் மக்கள்தொகை காரணமாக செழித்து வருகிறது. நாட்டில் உள்ள துடிப்பான தொழிலாளர் சந்தை, நீண்டகால குடியிருப்பு விசாக்கள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு உள்ளிட்டவை அமீரகத்திற்கு மிகவும் திறமையான தொழிலாளர்களை தொடர்ந்து ஈர்ப்பதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து எமிரேட்ஸ் NBD ஆராய்ச்சியின் குழு தலைமை முதலீட்டு அதிகாரி மாரிஸ் கிரேவியர் என்பவர் கருத்து தெரிவிக்கையில், உழைக்கும் வயதுடைய வெளிநாட்டவர்களால் வளர்ந்து வரும் மக்கள்தொகை, துபாயின் பொருளாதார வெற்றிக்கு ஒரு முக்கிய உந்துதலாக உள்ளது என்பதை எடுத்துரைத்துள்ளார்.
மேலும், 2024 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் துபாயின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.1% வளர்ச்சியடைந்துள்ளது. இது 2023 ஆம் ஆண்டில் 329 பில்லியனாக இருந்துள்ளது. அதுவே கடந்த ஆண்டில் 339 பில்லியன் திர்ஹம்ஸை எட்டியதாக எமிரேட்ஸ் NBD ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையில், அமீரகத்தில் வசதிவாய்ந்த வெளிநாட்டினரின் வளர்ந்து வரும் வருகை இந்த விரிவாக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக குளோபல் இன்வெஸ்ட்மென்ட் அவுட்லுக் 2025 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. இது துபாயின் மக்கள் தொகை மட்டுமல்லாது மொத்த அமீரகத்தின் மக்கள் தொகை மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel