துபாயைத் தளமாகக் கொண்டு செயல்படும் எமிரேட்ஸ் விமான நிறுவனம் புதிதாக ஒரு பார்சல் சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆம், VIP பார்சல் சேவை என்ற பெயரில் முக்கியமான பார்சல்களை உங்கள் வீட்டு வாசலுக்கே வந்து நேரடியாக வழங்குவதை உறுதியளிக்கும் விதமாக இந்த சேவையை எமிரேட்ஸ் அறிமுகப்படுத்தவுள்ளது.
இது தொடர்பாக விமான நிறுவனம் பகிர்ந்துள்ள புகைப்படத்தில், எமிரேட்ஸ் A350 விமானம் ஒரு குடியிருப்பு பகுதியில் தரையிறங்குவதும், அதில் ஒரு விமானப் பணிப்பெண் ஒரு பார்சலை வழங்குவதும் இடம்பெற்றுள்ளது. “மிக முக்கியமான பார்சல்களை (very important parcels – VIP)” இலக்காகக் கொண்ட இந்தப் புதிய சேவை, பொருட்களை வீட்டிற்கே கொண்டு செல்ல முன்னுரிமை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது.
புதிய சேவையின் விவரங்கள்
இந்தப் புதிய சேவையை கமெர்ஷியல் ஏர்லைன் சேவைகளின் எல்லைகளை உடைத்து, விஐபி வாடிக்கையாளர்களின் தனித்துவமான தேவைகளைப் பூர்த்தி செய்யும் வீட்டுக்கு வீடு டெலிவரி அனுபவத்தை வழங்குவதாகவும் எமிரேட்ஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
எமிரேட்ஸின் கூற்றுப்படி, இந்த சேவை முக்கிய வாடிக்கையாளர்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டதாகவும் மற்றும் கருத்துச் சான்று சோதனைகளின் போது நேர்மறையான கருத்துக்களைப் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆரம்பத்தில், இந்த சேவை ஏழு சந்தைகளில் கிடைக்கும் என்றும் பின்னர் எமிரேட்ஸின் உலகளாவிய நெட்வொர்க் முழுவதும் விரிவடையும் என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
கேரியரின் இந்த அறிவிப்பு உற்சாகமாகத் தோன்றினாலும், ஏப்ரல் முட்டாள்கள் தினத்திற்கு முன்னதாகவே வருவதால், இது விமான நிறுவனத்தின் விளையாட்டுத்தனமான குறும்புகளின் ஒரு பகுதியாக இருக்கும் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஏனெனில் இதற்கு முன்பு ஏப்ரல் 1ம் தேதியில் மிகவும் சந்தேகம் கொண்ட வாசகர்களைக் கூட நம்ப வைக்கும் வகையில் எமிரேட்ஸ் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
எமிரேட்ஸின் பிரபலமான ஏப்ரல் முட்டாள்கள் தின குறும்புகள்
முந்தைய ஆண்டுகளில், எமிரேட்ஸ் சில மறக்கமுடியாத மற்றும் நகைச்சுவையான ஏப்ரல் முட்டாள்களின் குறும்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் கடந்த 2024ம் ஆண்டு, விமான நிறுவனம் குடியிருப்பாளர்களுக்கான அதன் சொந்த விமான நிலையத்துடன் 380 மாடி எமிரேட்ஸ் ரெசிடென்சஸ் கோபுரம் கட்டப்படவிருப்பதாக அறிவித்தது. மேலும், பிப்ரவரி 31 அன்று கட்டுமானத்தைத் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தது. ஆனால் பிப்ரவரி 31 என்ற தேதி கிடையாது என்பதுதான் இங்கு நகைப்பிற்குரியது.
அதேபோன்று கடந்த 2023ம் ஆண்டில் ‘sea line’ என்று அழைக்கப்படும் ஆடம்பர எமிரேட்ஸ் சொகுசு கப்பல், அட்லாண்டிஸ் வழியாகச் செள்ளும் என்று விமான நிறுவனம் அறிவித்தது, இதற்கான முன்பதிவுகள் ஜூன் 31ம் தேதி முதல் தொடங்குகின்றன என்றும் குறிப்பிட்டது. ஆனால் ஜூன் மாதத்தில் 30 நாட்கள் மட்டுமே உள்ளது. இதேபோன்று ஸ்கை லவுஞ்ச், டிரிபிள்-டெக்கர் விமானம் மற்றும் ஓட்டுநர் இல்லாத ட்ரோன் என பல அறிவிப்புகளை நகைச்சுவையாக வெளியிட்டிருந்தது.
இவ்வாறு எமிரேட்ஸ் விமான நிறுவனம் அதன் குறும்புகளுக்குப் பெயர் பெற்றிருந்தாலும், 2025 அறிவிப்பில் நகைச்சுவையாக இருப்பதற்கான எந்த வெளிப்படையான அறிகுறிகளும் இல்லை. அத்துடன், இந்த பார்சல் சேவை குறித்த விபரங்கள் எமிரேட்ஸ் நிறுவனத்தால் விரைவில் பகிரப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
எனவே, உண்மையாகவே இது ஒரு புதிய சேவையா அல்லது எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் மற்றொரு புத்திசாலித்தனமான குறும்புதானா என்பதை பயணிகள் மற்றும் அமீரக குடியிருப்பாளர்கள் உறுதி செய்ய இன்னும் சில காலம் பொருத்திருக்க வேண்டும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel