ADVERTISEMENT

500கிமீ வரை பயணிக்க கூடிய புதிய பறக்கும் கார் அமீரகத்தில் அறிமுகம்.. 140 நிமிடங்களில் துபாய்-பஹ்ரைன் பயணம்..!!

Published: 18 Apr 2025, 7:29 PM |
Updated: 18 Apr 2025, 7:35 PM |
Posted By: Menaka

ஸ்மார்ட், நிலையான மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதற்கான தெளிவான தொலைநோக்குப் பார்வையுடன் ஐக்கிய அரபு அமீரகம் அதன் போக்குவரத்துத் துறையை விரைவாக மாற்றியமைத்து வருகிறது. அதாவது, செல்ஃப்-டிரைவிங் வாகனங்கள், எலெக்ட்ரிக் பஸ், ஹைப்பர்லூப் திட்டங்கள் மற்றும் பறக்கும் டாக்ஸிகளுக்கான வெர்டிபோர்ட்களை உருவாக்குதல் என அடுத்தடுத்து எதிர்கால மொபிலிட்டி தீர்வுகளில் முதலீடு செய்வதன் மூலம், அமீரகம் ஸ்மார்ட் போக்குவரத்துக்கான உலகளாவிய மையமாக மாறுவதையும் புதுமை, நிலைத்தன்மை மற்றும் தரமான உள்கட்டமைப்பு ஆகியவற்றில் பிராந்தியத்தை வழிநடத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், ஹாலந்தை தளமாகக் கொண்ட மொபிலிட்டி தீர்வு வழங்குநரான PAL-V நிறுவனம் தனது பறக்கும் காரை ஷார்ஜா ஆராய்ச்சி தொழில்நுட்பம் மற்றும் புதுமை பூங்காவில் (SRTIP) வியாழனன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

PAL-V flying car

ADVERTISEMENT

இதன் மூலம் அமீரகக் குடியிருப்பாளர்கள் 2027 ஆம் ஆண்டுக்குள், பறக்கும் கார்களில் பயணிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, எந்தவொரு விமானத்திலும் ஏறாமல், துபாயிலிருந்து பஹ்ரைனுக்கு வெறும் 2 மணி நேரம் 20 நிமிடங்களில் பறப்பதையோ அல்லது ரியாத்திலிருந்து குவைத்துக்கு 2 மணி நேரம் 40 நிமிடங்களில் பயணிப்பதையோ கற்பனை கூட செய்து பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், இந்த பறக்கும் கார் மூலம் போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து, அருகிலுள்ள நாடுகளை முன்னெப்போதையும் விட வேகமாக அடைய முடியும் என கூறப்பட்டுள்ளது.

பறக்கும் காரின் சிறப்பம்சங்கள்

‘flydrive mobility car’ ஆனது பறக்கவும் தரையில் ஓட்டவும் முடியும், மேலும் அது புறப்பட 250 மீட்டர் நீளமுள்ள ஒரு ஸ்ட்ரிப் மட்டுமே தேவை. இந்த வாகனம் தரையில் இருக்கும்போது, ​​சாதாரண காரைப் போல இயக்கக்கூடிய வகையில் புரொப்பல்லர்கள் மடிக்கப்படும் என்று கூறப்படுகின்றது.

ADVERTISEMENT
  • இருக்கைகள்: 2 பேர்
  • லக்கேஜ்கள்: 20 கிலோ வரை
  • திறன்: முழு எரிபொருளுடன் 500 கி.மீ வரை பறக்கும்
  • விலை: $800,000 (சுமார் 2.9 மில்லியன் திர்ஹம்)
  • எரிபொருள் வகை: எரிப்பு இயந்திரம் (combustion engine)

முக்கிய பயன்கள்

இது குறைந்த உயரத்தில் பறக்கும் மற்றும் அவசரநிலை, எல்லை ரோந்து, கடலோர காவல்படை மற்றும் பிற இராணுவ நோக்கங்களுக்காக மருத்துவர்கள் தங்கள் இலக்கை விரைவாக அடைய உதவும். அதுமட்டுமில்லாமல், இந்த கார் வாகனங்களை மாற்றாமல் செல்ல வேண்டிய இடத்திற்கு நேரடியாக  போக்குவரத்து சேவையை வழங்கும் என்றும், ஏற்கனவே உள்ள உள்கட்டமைப்பு மற்றும் விதிமுறைகளைப் பயன்படுத்தலாம் என்றும் PAL-Vயின் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான ராபர்ட் டிங்கெமான்ஸ் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். அத்துடன் இது ஹெலிகாப்டரை விட இயக்க பாதுகாப்பானது மற்றும் மலிவானது என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.

அவரது கூற்றுப்படி, PAL-V ஆனது UAE அல்லது மத்திய கிழக்கில் ஒரு பைலட் பயிற்சி மையத்தைத் திறக்க திட்டமிட்டுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமீரகத்தை தளமாகக் கொண்ட ‘Jetex’ என்ற நிறுவனம் ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட PAL-V பறக்கும் கார்களை ஆர்டர் செய்துள்ளதாகவும், உலகளாவிய முன்கூட்டிய ஆர்டர்களில் €150 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், உள்நாட்டில் பறக்கும் கார்களுக்கான அசெம்பிளி யூனிட்டை உருவாக்க PAL-V உடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக SRTIP இன் தலைமை நிர்வாக அதிகாரி ஹுசைன் அல்மஹ்மூடி கூறியுள்ளார்.

இந்த அதிநவீன பறக்கும் கார்கள் புதுமை மற்றும் நிலையான போக்குவரத்திற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் உறுதிப்பாட்டைக் காட்டுகின்றன என்று SRTIP அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு தொடக்கத்தில், ‘ஆர்ச்சர் ஏவியேஷன் (Archer Aviation)’ மற்றும் ‘ஜோபி (Joby)’ போன்ற பிற நிறுவனங்களும் அமீரகத்தில் பறக்கும் டாக்சிகளை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. அத்துடன் துபாய் ஏற்கனவே அதன் முதல் வெர்டிபோர்ட்டை (பறக்கும் டாக்சிகளுக்கான தரையிறங்கும் பகுதி) துபாய் இன்டர்நேஷனல் வெர்டிபோர்ட் (DXV) என்று பெயரிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel