அபுதாபியில் உள்ள மக்கள் இப்போது யாஸ் ஐலேண்ட் அல்லது சாதியத் ஐலேண்டிலிருந்து சையத் சர்வதேச விமான நிலையத்திற்கு ஓட்டுநர் இல்லாத டாக்ஸியில் பயணிக்கலாம். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், ஓட்டுநர் இல்லாத டாக்ஸி சேவையானது தற்பொழுது முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது என்பதாகும். இது மிகவும் நவீன மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை கொண்டு வருவதற்கான நகரத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாகும். ஆரம்பத்தில் அதாவது 2021 இல் யாஸ் மற்றும் சாதியத் ஐலேண்ட்ஸ்க்குள் இயங்கத் தொடங்கிய இந்த தானியங்கி டாக்ஸிகள், இப்போது விமான நிலையம் உட்பட தலைநகரின் முக்கிய இடங்களை இணைக்க விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த விரிவாக்கம் போக்குவரத்து அமைப்பில் மேம்பட்ட தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்கும் அபுதாபி மொபிலிட்டியின் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது என்று அபுதாபியில் தானியங்கி வாகன போக்குவரத்து சேவையின் விரிவாக்கப் பொறுப்பாளர் பாத்திமா அல் ஹன்டூபி தெரிவித்துள்ளார்.
அவரது கூற்றுப்படி, முதன்முதலாக, இந்த சேவை 2021-ல் தொடங்கப்பட்டதிலிருந்து 30,000 பயணங்களுக்கு மேல் நிறைவு செய்து, அனைத்தும் ஒரு விபத்து கூட இல்லாமல் சுமார் 430,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவு பயணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய சிறப்பம்சங்கள்:
இந்த டாக்ஸிகள் சோதனைகளின் போது மனித தலையீடு குறைவாகவும் 99 சதவீதம் தானியங்கி சேவையில் துல்லியமாக வாகனம் ஓட்டப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இது இந்த வாகன சேவையின் பாதுகாப்பு மற்றும் துல்லியத்தன்மையை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த சோதனையின் போது பாதுகாப்பு ஆபரேட்டர் உடன் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கார் எல்லா நேரங்களிலும் சீராகவும் பாதுகாப்பாகவும் இயங்குவதை உறுதி செய்வதற்காக நிகழ்நேர கண்காணிப்பு அமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு வாகனமும் LiDAR, ரேடார், GPS மற்றும் உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமராக்கள் உள்ளிட்ட உயர்நிலை தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளன, இது காருக்கு அதன் சுற்றுப்புறங்களின் 360 டிகிரி காட்சியை வழங்க ஒன்றாக வேலை செய்கிறது.
இந்த புதுமையான வாகன சேவை இப்போதைக்கு இலவசமாகக் கிடைக்கிறது, எனவே, பயணிகள் நியமிக்கப்பட்ட செயல்பாட்டு மண்டலங்களுக்குள் இந்த சேவையை அணுகலாம். மேலும், Txai செயலி மூலம் பயணங்களை முன்பதிவு செய்யலாம், இது கார் எங்கே, எப்போது வரும் என்பதைக் காட்டுகிறது.
நகரத்தில் தற்போது 18 தானியங்கி டாக்ஸிகள் இயங்குகின்றன. சேவையின் எதிர்கால கட்டங்களில், இந்த டாக்ஸிகள் AI மற்றும் V2X (vehicle-to-everything) தொடர்பு ஆகியவற்றைப் பயன்படுத்தலாம், மேலும் அதிக நெரிசலான நகரப் பகுதிகளுக்கு விரிவடையலாம் என்று பாத்திமா கூறியுள்ளார்.
இதை யார் பயன்படுத்தலாம்?
குறிப்பிட்ட செயல்பாட்டு மண்டலங்களுக்குள் உள்ள எவரும் டாக்சி சேவைக்கு முன்பதிவு செய்யலாம். இது உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இருவருக்கும் கிடைக்கிறது.
மக்களின் கருத்து
பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் இந்த அனுபவத்தை உற்சாகமாகவும் பாதுகாப்பாகவும் கருதுகின்றனர். மேலும், பல பயனர்கள் இது ஒரு வழக்கமான டாக்ஸி சவாரி போல உணர்ந்ததாகக் கூறுகின்றனர். அபுதாபி, இந்த சேவை மூலம், தானியங்கு வாகன சேவைகள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறி வருகின்றன என்பதை நிரூபித்து வருகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel