அமீரகத்தில் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன் தாய் மற்றும் 2 வயது மகள் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த நிலையில் தற்பொழுது இது போல மற்றுமொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை மதியம் அபுதாபியின் டூரிஸ்ட் க்ளப் ஏரியாவில் (Tourist Club Area) உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னலில் இருந்து விழுந்து 17 வயது இந்திய மாணவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.
அபுதாபி இந்தியன் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த அலெக்ஸ் பினாய், தனது CBSE வாரியத் தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருந்ததாகவும், ஏற்கனவே இந்தியாவில் உள்ள ஒரு கல்லூரியில் தற்காலிக சேர்க்கை பெற்றிருந்ததாகவும் கூறப்படுகின்றது. கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பினாய் தாமஸ் மற்றும் எல்சி பினாய் ஆகியோரின் மூன்று மகன்களில் அலெக்ஸ் மூன்றாவது மகன் ஆவார்.
தங்கள் மூன்றாவது மாடி குடியிருப்பில் தனது படுக்கையறையின் ஜன்னலிலிருந்து எப்படி விழுந்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துயர சம்பவம் பிற்பகல் 3:30 மணியளவில் நிகழ்ந்ததாகவும், மேலும் கட்டிடத்தின் வாட்ச்மேன் தகவல் தெரிவித்த பின்னரே குடும்பத்தினருக்குத் தெரிய வந்ததாகவும் உறவினர்கள் கூறியுள்ளனர்.
தனது படுக்கையறையின் மூன்றாவது மாடி ஜன்னலில் இருந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த மாணவர், அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார், ஆனால் படுகாயமடைந்த அவர் சில மணி நேர சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவரது உடலை சனிக்கிழமை இந்தியாவுக்குக் கொண்டு வர ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும், ஞாயிற்றுக்கிழமை கேரளாவில் உள்ள அவர்களது சொந்த ஊரில் உள்ள ஒரு தேவாலயத்தில் அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும் அலெக்ஸின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel