பாகிஸ்தான் தனது வான்வெளியை இந்தியாவுக்குச் சொந்தமான அனைத்து விமான நிறுவனங்களுக்கும் வியாக்கிழமை உடனடியாக மூட முடிவு செய்ததைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா இடையேயான விமானங்கள் தாமதங்களையும் நீண்ட பயண நேரத்தையும் சந்திக்க நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வார தொடக்கத்தில் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த ஒரு கொடிய பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, 26 இந்திய சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து இரு நாடுகளின் தலைநகர்களான இஸ்லாமாபாத் மற்றும் புது தில்லி இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பட்ஜெட் கேரியர்களில் ஒன்றான ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், வட அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான வழித்தடங்கள் உட்பட அதன் பல சர்வதேச விமானங்கள் இப்போது மாற்றுவழியிலும், நீட்டிக்கப்பட்ட விமானப் பாதைகளையும் பின்பற்றும் என்று உறுதிப்படுத்தியுள்ளது.
இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் “எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட இந்த எதிர்பாராத வான்வெளி மூடலால் எங்கள் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு ஏர் இந்தியா வருத்தம் தெரிவிக்கிறது. எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு எங்கள் மிக உயர்ந்த முன்னுரிமையாக உள்ளது,” என்று விமான நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விமான செயல்பாடுகளில் பாதிப்பு
துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவிலிருந்து டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு போன்ற முக்கிய இந்திய நகரங்களுக்கு பறக்கும் தினசரி விமானங்கள் மிகக் குறுகிய பாதைக்கு பாகிஸ்தான் வான்வெளியை நம்பியிருப்பதால், இந்தத் தடை உலகளவில் மிகவும் பரபரப்பான விமானப் பாதைகளில் ஒன்றை கணிசமாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வான்வெளி அணுகல் தற்போது தடைசெய்யப்பட்டுள்ளதால், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விமானங்களை இயக்கும் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இண்டிகோ போன்ற இந்திய விமான நிறுவனங்கள் அரபிக் கடல் வழியாகவோ அல்லது நீண்ட தெற்குப் பாதைகள் வழியாகவோ மாற்றுப்பாதையில் செல்ல வேண்டியிருக்கும், இதனால் இரண்டு மணிநேரம் வரை அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகின்றது.
தற்சமயம், இந்திய விமான நிறுவனங்கள் இன்னும் முழு செயல்பாட்டு தாக்கத்தை மதிப்பிடும் அதே வேளையில், எமிரேட்ஸ், எதிஹாட், ஃப்ளைதுபாய் மற்றும் ஏர் அரேபியா போன்ற ஐக்கிய அரபு அமீரகத்தைத் தளமாகக் கொண்ட விமான நிறுவனங்கள் இந்த மூடலால் பாதிக்கப்படவில்லை, ஏனெனில் இது இந்திய விமான நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். இருப்பினும், இந்திய விமான நிலையங்களில் விமானப் போக்குவரத்து நெரிசல் மற்றும் ஸ்லாட் மறுசீரமைப்பு என மறைமுக இடையூறுகளுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பயணிகள் எதிர்கொள்ளவிருக்கும் சவால்
இந்த மூடல் நீடித்தால், டிக்கெட் கட்டண உயர்வுகள் மற்றும் பயண திட்டமிடலில் சவால்களுக்கு வழிவகுக்கும் என்று துபாயைச் சேர்ந்த டிக்கெட் முகவர் எச்சரித்துள்ளார். பயண வல்லுனர்களின் கூற்றுப்படி, இந்த மாற்றுப்பாதை முதன்மையாக இந்திய விமான நிறுவனங்களை பாதிக்கும். அதிக எரிபொருள் நுகர்வு காரணமாக பயணிகள் சற்று நீண்ட விமான நேரத்தையும், ஓரளவு கட்டண உயர்வையும் சந்திக்க நேரிடும் என்றும், இருப்பினும், வளைகுடா விமான நிறுவனங்கள் பாகிஸ்தான் வான்வெளி வழியாக எந்த பிரச்சனையும் இல்லாமல் தங்கள் நடவடிக்கைகளைத் தொடர முடியும் என்றும் குறிப்பிடுகின்றனர்.
இதற்கிடையில், சில பயணத்துறை நிர்வாகிகள் குறுகிய காலத்தில் கட்டணங்கள் உயர வாய்ப்பில்லை என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர். “விமான இணைப்பை பராமரிப்பதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, விமான நிறுவனங்கள் இப்போதைக்கு விலைகளை நிலையாக வைத்திருக்கலாம்” என்று கூறுகின்றனர்.
இந்தத் தடையால் வட இந்திய நகரங்களே இதனால் அதிகம் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக, டெல்லி, அமிர்தசரஸ், ஸ்ரீநகர் மற்றும் சண்டிகர் போன்ற இடங்களுக்கு விமானங்கள் கூடுதலாக 15 முதல் 30 நிமிடங்கள் பயண நேரத்தைக் காணலாம் என்று தெரிவிக்கின்றனர்.
மேலும், பல பயணத்துறை நிர்வாகிகள் முந்தைய அனுபவத்தின் அடிப்படையில், விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு குறைந்தபட்ச இடையூறுகளுடன் செயல்பாட்டு சவால்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முடியும் என்றும், பயணிகளின் பாதுகாப்பை முதன்மையான முன்னுரிமையாக வைத்து விமான நிறுவனங்கள் மறுவழிப்பாதையை நிர்வகிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
முதல்முறை அல்ல
இதுபோன்ற புவிசார் அரசியல் பதட்டங்கள் இப்பகுதியில் விமானப் பயணத்தை சீர்குலைப்பது இது முதல் முறை அல்ல. இது குறித்த செய்தி அறிக்கைகளின் படி, 2019 ஆம் ஆண்டில், புல்வாமா தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து இராணுவ விரிவாக்கத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தான் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு அதன் வான்வெளியை மூடியது.
இந்த நடவடிக்கையால் தினமும் 400க்கும் மேற்பட்ட விமானங்கள் பாதிக்கப்பட்டன, மேலும் விரிவான வழித்தட மாற்றம் ஏற்பட்டது, இதன் விளைவாக நீண்ட பயண நேரங்கள் மற்றும் எரிபொருள் செலவுகள் அதிகரித்ததாக அறிக்கைகள் கூறுகின்றன.
அதுமட்டுமில்லாமல், அந்த காலகட்டத்தில், இந்திய விமான நிறுவனங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு பயணித்த பயணிகள் சராசரியாக 60 முதல் 90 நிமிடங்கள் வரை தாமதங்களை சந்தித்ததாகவும், சில சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன அல்லது நிறுத்தங்கள் மற்றும் திருத்தப்பட்ட பணியாளர் மாற்றங்களை உள்ளடக்கிய வகையில் மறுசீரமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பயணிகள் ஆலோசனை
தற்போதைய சூழ்நிலையில், வரும் நாட்களில் இந்திய விமான நிறுவனங்களில் இந்தியாவிற்கு பறக்கும் பயணிகள், ஏதேனும் அட்டவணை மாற்றங்கள் குறித்து தங்கள் விமான நிறுவனங்களுடன் புதுப்பித்த நிலையில் இருக்கவும், வழித்தட மாற்றம் காரணமாக ஏற்படக்கூடிய தாமதங்களுக்குத் தயாராகவும் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel