அமீரகத்தில் இன்றைய தினம் (புதன்கிழமை, ஏப்ரல் 2) வானிலை பெரும்பாலும் தெளிவாக இருக்கும் என்றும், பிற்பகலில் சில மேகமூட்டங்கள் இருக்கும் என்றும் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. மேலும், பெரும்பாலான பகுதிகளில் நாள் முழுவதும் வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
NCM வெளியிட்ட அறிக்கையின் படி, அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் இரண்டிலும் அலைகள் லேசானதாக இருக்கும். தென்கிழக்கில் இருந்து வடகிழக்கு நோக்கி லேசானது முதல் மிதமான காற்று வீசும், இதன் வேகம் மணிக்கு 10 முதல் 20 கிமீ வரை இருக்கும், சில நேரங்களில் மணிக்கு 30 கிமீ வரை கூட இருக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளளது.
அமீரகம் முழுவதும் நிலவும் வெப்பநிலையைப் பொறுத்தவரை, துபாயில் அதிகபட்சமாக 35°C மற்றும் குறைந்தபட்சம் 25°C வரை வெப்பநிலை பதிவாகும். அதே நேரத்தில் தலைநகரான அபுதாபி பகலில் 36°C வரை உயரும் எனவும், இது இரவில் 21°C வெப்பநிலை வரை குறையும் என்றும் NCM ஆல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான வெப்பம் மற்றும் அதிக வெப்பநிலைக்கு பெயர் பெற்ற ஐக்கிய அரபு அமீரகம் தற்போது குளிர்காலத்திலிருந்து வசந்த காலத்திற்கு மாறுவதால், நாட்டில் அடிக்கடி வானிலை மாற்றங்கள் ஏற்படுவதாகவும், வானிலையில் நிலவும் இந்த நிலையற்ற தன்மை மே மாதம் வரை நீடிக்கும் என்றும் NCM அறிவித்துள்ளது.
இந்த நீடித்த வானிலை, ஐக்கிய அரபு அமீரகத்தின் பயண மற்றும் சுற்றுலாத் துறைக்கு சாதகமாக அமைந்துள்ளது. பொதுவாக அமீரகத்தில் சுற்றுலாப் பயணிகளின் உச்ச பயணக் காலம் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் முடிவடையும். ஆனால் இப்போது நாட்டில் தொடரும் மிதமான வானிலை காரணமாக சுற்றுலா பருவம் ஏப்ரல் வரை நீட்டிக்கப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel