இந்த வார இறுதியில் சுமார் 300,000 க்கும் மேற்பட்ட பயணிகள் துபாய் விமான நிலையத்தை பயன்படுத்தவிருப்பதால் எமிரேட்ஸ் விமான நிறுவனம், துபாய் சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 3 இலிருந்து பயணிக்கும் பயணிகளுக்கு ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. எமிரேட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஏப்ரல் 18 வெள்ளிக்கிழமை முதல் ஏப்ரல் 21 திங்கள் வரை அதிக மக்கள் கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, தாமதங்களைத் தவிர்க்க பயணிகள் தங்கள் திட்டமிடப்பட்ட புறப்படும் நேரத்திற்கு முன்கூட்டியே புறப்படுமாறும், அனைத்து பயண ஆவணங்களும் தயாராகவும் எளிதாக அணுகக்கூடியதாகவும் இருப்பதை உறுதிசெய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
எமிரேட்ஸ் விமானத்தில் பயணிக்கவுள்ள பயணிகள் எமிரேட்ஸ் வலைத்தளம் (emirates.com) அல்லது எமிரேட்ஸ் ஆப் மூலம் ஆன்லைன் செக்-இன்னைப் பயன்படுத்தலாம் என்று எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது, இது புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு திறந்து டிஜிட்டல் போர்டிங் பாஸை வழங்குகிறது.
விமான நிலைய செக்-இன் (டெர்மினல் 3)
விமான நிலைய செக்-இன்களை விரும்புவோருக்கு புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு கவுண்டர்கள் திறந்திருக்கும். மேலும், பயணிகள் தங்கள் விமானத்திற்கு முந்தைய இரவு லக்கேஜ்களை டிராப் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். இது கடைசிநேர மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. அத்துடன் விரைவான பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு செயல்முறைக்கு விமான நிலையம் வசதியான பயோமெட்ரிக் வாயில்களையும் வழங்குகிறது.
மாற்று செக்-இன் இடங்கள்
- DIFC-ல் உள்ள ICD புரூக்ஃபீல்ட் பிளேஸின் சிட்டி செக்-இன் & டிராவல் ஸ்டோர் (City Check-In & Travel Store at ICD Brookfield Place in DIFC): புறப்படுவதற்கு 24 மணிநேரம் முதல் 4 மணி நேரம் முன்பு வரை திறந்திருக்கும்
- அஜ்மான் சென்ட்ரல் பஸ் டெர்மினல்: புறப்படுவதற்கு 24 முதல் 4 மணி நேரத்திற்கு முன் வரை செக்-இன்
எல்லாவற்றுக்கும் மேலாக, பாஸ்போர்ட் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு சோதனைகளை குறைந்தது 90 நிமிடங்களுக்கு முன் முடிக்க வேண்டும். குறிப்பாக, பிரீமியம் எகானமி அல்லது எகானமி வகுப்பில் பயணிக்கும் பயணிகள் புறப்படுவதற்கு 60 நிமிடங்களுக்கு முன்பே தங்கள் போர்டிங் கேட்டில் இருக்க வேண்டும். ஃபர்ஸ்ட் மற்றும் பிசினஸ் கிளாஸ் பயணிகள் புறப்படுவதற்கு குறைந்தது 45 நிமிடங்களுக்கு முன்பே வாயிலுக்கு வர அறிவுறுத்தப்படுகிறார்கள்.
திட்டமிடப்பட்ட புறப்படும் நேரத்திற்கு 20 நிமிடங்களுக்கு முன்பு போர்டிங் கேட்கள் கண்டிப்பாக மூடப்படும். எனவே, தாமதமாக வருபவர்கள் பயணத்திற்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள் என்பதை விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. அனைத்து விமானங்களும் சரியான நேரத்தில் புறப்படுவதை உறுதி செய்வதற்காக, செக்-இன் மற்றும் கேட் மூடலுக்கான இந்த நேரங்கள் கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என்பதையும் எமிரேட்ஸ் வலியுறுத்தியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel