ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் அதிகரித்து காணப்படுகின்றது. வெயிலின் தாக்கத்தை குறைக்க அமீரக அரசும் கிளவுட் சீடிங் (cloud seeding) முறையை மேற்கொண்டிருக்கின்றது. இருந்த போதிலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) நாட்டில் மழைப்பொழிவை அதிகரிக்க நடப்பு ஆண்டின் தொடக்கத்திலிருந்து 110 கிளவுட் சீடிங் பணிகளை மேற்கொண்டும், வழக்கத்திற்கு மாறாக வறண்ட வானிலை காணப்படுவதாகவும், பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யவில்லை அல்லது குறைவாகவே பெய்துள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
NCM அறிக்கையின் படி, இது வரை பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு ஜனவரி 14 அன்று ராஸ் அல் கைமாவில் உள்ள ஜெபல் ஜெய்ஸில் பெய்த வெறும் 20.1 மிமீ மழை மட்டுமே ஆகும். அத்துடன் அமீரகம் முழுவதும் பரவலாக வெயில் அதிகரித்து காணப்படுகின்றது. இவ்வாறு மிகுந்த வெப்பமான பாலைவன காலநிலைக்கு பெயர் பெற்ற ஐக்கிய அரபு அமீரகத்தில் மழைப்பொழிவை அதிகரிக்கும் நோக்கில் அவ்வப்போது கிளவுட் சீடிங் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கிளவுட் சீடிங் என்பது மேகங்களிலிருந்து மழையை ஊக்குவிக்க சிறப்பு விமானங்களைப் பயன்படுத்தி மேகங்களுக்குள் குறிப்பிட்ட வேதிப் பொருட்களைச் சேர்த்து, செயற்கையாக மழைப்பொழிவை ஏற்படுத்தும் ஒரு செயல்முறையை உள்ளடக்கியது.
ஐக்கிய அரபு அமீரகம் தகுந்த நேரத்தில் மிகவும் சரியான மழை மேகங்களை குறிவைக்க மேம்பட்ட ரேடார் அமைப்புகள் மற்றும் ஆறு பிரத்யேக விமானங்களைப் பயன்படுத்துகிறது. இந்நிலையில் அரேபிய வளைகுடாவில் கிளவுட் சீடிங்கில் அமீரகம் முன்னணியில் இருந்தாலும், மழைப்பொழிவானது இயற்கை வானிலை நிலவரங்களை பொறுத்தது என்பதை வானிலை மையம் எடுத்துரைத்துள்ளது.
மேலும், இந்த ஆண்டின் வறட்சி முக்கியமாக ‘La Niña’ என்ற நிகழ்வின் காரணமாக நிகழ்வதாகக் கூறப்படுகின்றது, இது பிராந்தியத்தில் உயர் அழுத்த அமைப்புகளை அதிகரிக்கும் வானிலை முறையாகும். இந்த அமைப்புகள் வழக்கமாக மழையைத் தரும் குறைந்த அழுத்த வானிலை அமைப்புகளைத் தடுக்கின்றன. இதனால் மழை பெய்வது தவிர்க்கப்படுவதாக கூறப்படுகின்றது.
அமீரகத்தில் கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வரலாறு காணாத மழையை எதிர்கொண்டு வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் மழை ஏதுமின்றி வறண்ட வானிலை காணப்படுகின்றது. ஏப்ரல் மாதத்திலேயே வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் கோடைகாலமான ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வெயிலின் தாக்கம் எப்படி இருக்க போகின்றது என நினைத்து கவையடைகின்றனர் அமீரகவாசிகள்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel