அபுதாபி சுகாதாரத் துறையானது (DoH) ஜனவரி மாதம் முதல் 40க்கும் மேற்பட்ட பாதுகாப்பற்ற தயாரிப்புகளை அடையாளம் கண்டுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உட்பட இந்த தயாரிப்பு பொருட்கள், ஈஸ்ட், பூஞ்சை, பாக்டீரியா, கன உலோகங்கள் மற்றும் அறிவிக்கப்படாத போதை மருந்துகள் போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களால் மாசுபட்டவை அல்லது கலப்படம் செய்யப்பட்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடற்கட்டமைப்பு, எடை இழப்பு, அழகுசாதனப் பொருட்கள் மற்றும் பிற உடல்நலம் தொடர்பான பயன்பாடுகளுக்காக சந்தைப்படுத்தப்படும் மருந்துகள் உள்ளிட்ட இந்தப் பொருட்கள் நுகர்வோருக்கு குறிப்பிடத்தக்க உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகின்றன என்று சுகாதாரத் துறை (DoH) தெரிவித்துள்ளது.
மார்ச் 27 அன்று வெளியிடப்பட்ட மிகச் சமீபத்திய புதுப்பிப்பில், இந்தப் பொருட்கள் ஈஸ்ட், பூஞ்சை, பாக்டீரியா அல்லது கன உலோகங்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களால் மாசுபட்டிருப்பது கண்டறியப்பட்டது. இந்த தயாரிப்புகள், பெரும்பாலும் சுகாதாரமற்ற நிலையில் மற்றும் நல்ல உற்பத்தி நடைமுறைகளை (GMP) கடைபிடிக்காமல் தயாரிக்கப்படுகின்றன, தவறாகப் பயன்படுத்தப்படும்போது கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று DoH எச்சரித்துள்ளது.
அடையாளம் காணப்பட்ட கலப்படம் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் Bronz Tone Black Spot Corrector, Bio Claire Lightening Body Lotion, Re5hape hi Morning, Rhino Super Long Lasting 70000, Pink Pussycat, Gluta White Anti-Acne Cream மற்றும் இது போன்ற பல தயாரிப்புகள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல்நல அபாயங்கள் மற்றும் நுகர்வோர் எச்சரிக்கைகள்
நுகர்வோர்களாகிய பல குடியிருப்பாளர்கள் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் எப்போதும் பாதுகாப்பானவை மற்றும் இயற்கையானவை என்று தவறாக நம்புகிறார்கள். இருப்பினும், இந்த பொருட்கள் மற்ற மருந்துகளுடன் இணைந்தால் ஏற்படும் அபாயங்களைப் புரிந்து கொள்ளாமல் அவற்றைப் பயன்படுத்துவது கடுமையான உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கலப்படப் பொருட்கள் மீதான UAE சட்டம்
இந்த ஆபத்தான பொருட்களை எதிர்த்துப் போராட, அமீரக அரசானது ஃபெடரல் ஆணை-சட்டம் எண். 42/2023 ஐ அமல்படுத்தியுள்ளது, இது நுகர்வோரைப் பாதுகாப்பது, பொருளின் தயாரிப்பு ஒருமைப்பாட்டை உறுதி செய்வது மற்றும் நியாயமான வர்த்தக நடைமுறைகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தச் சட்டம் வணிக மோசடி, போலிப் பொருட்கள் மற்றும் கலப்படம் செய்யப்பட்ட பொருட்களை சந்தையிலிருந்து அகற்றுவதற்கான நடைமுறைகளை வழங்குவதாகக் கூறப்படுகின்றது.
இந்த சட்டத்தின் கீழ், விதியினை மீறுபவர்கள் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 5,000 திர்ஹம் முதல் 1,000,000 வரை அபராதம் உட்பட கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும். மோசமான குற்றங்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் 100,000 திர்ஹம் முதல் 2,000,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படலாம், அத்துடன் சட்டவிரோத பொருட்களை கட்டாயமாக பறிமுதல் செய்தல் அல்லது அழித்தல் ஆகியவையும் விதிக்கப்படலாம்.
மீண்டும் மீண்டும் செய்யும் குற்றவாளிகள் இரட்டிப்பான அபராதங்களை எதிர்கொள்ள நேரிடும். சில சந்தர்ப்பங்களில், பாதுகாப்பற்ற பொருட்களை விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ள வணிகங்கள் ஒரு வருடம் வரை மூடப்படலாம், மேலும் மோசடி நடவடிக்கைகள் குறித்து மேலாளர்கள் அறிந்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கத் தவறினால் சட்ட விளைவுகளையும் சந்திக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
41 பாதுகாப்பற்ற தயாரிப்பு பொருட்களின் முழு பட்டியல்
இந்தப் பாதுகாப்பற்ற பொருட்களைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய, DoH மற்றும் பொருளாதார அமைச்சகம் (MoEc), FDA மற்றும் WHO போன்ற சர்வதேச சுகாதார அதிகாரிகள் மற்றும் தேசிய ஒழுங்குமுறை அமைப்புகளின் அறிக்கைகளை நம்பியுள்ளதாகக் கூறப்படுகின்றது.
எனவே, குடியிருப்பாளர்கள் தகவலறிந்தவர்களாக இருக்கவும், DoH ஆல் அடையாளம் காணப்பட்ட 41 பாதுகாப்பற்ற தயாரிப்புகளின் முழுமையான பட்டியலை மதிப்பாய்வு செய்யவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். அந்த பாதுகாப்பற்ற தயாரிப்பு பொருட்களின் முழு பட்டியலை இந்த லிங்கில் சென்று காணலாம்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel