சமீபத்தில், துபாயிலிருந்து மும்பைக்கு இணைக்கும் நீருக்கடியில் ரயில் பாதை அமைக்கும் லட்சியத் திட்டம் குறித்து இந்திய ஊடகங்கள் பரவலாக செய்தி வெளியிட்ட நிலையில், அத்திட்டம் இன்னும் “கருத்து நிலையிலேயே” இருப்பதாக தேசிய ஆலோசகர் பணியக லிமிடெட்டின் (National Advisor Bureau Limited) நிர்வாக இயக்குனர் அப்துல்லா அல் ஷெஹி தெளிவுபடுதத்தியுள்ளார்.
இந்தத் திட்டம் குறித்து உலகளாவிய கவனத்தை ஈர்த்த பரவலான ஊடகங்கள், குறிப்பாக இந்திய ஊடகங்கள் வெளியிட்ட செய்திக்கு பிறகு இந்த தெளிவுபடுத்தல் வந்துள்ளது. 2018 இல் முதன்முதலில் பரிந்துரைக்கப்பட்ட இந்த பாரிய திட்டம் குறித்த செய்திகள் சமீபத்தில் ஊடக அறிக்கைகளில் மீண்டும் வெளியாகின. மேலும் துபாய் இளவரசர் இன்று இந்தியா சென்ற நிலையில் பலரும் இந்த செய்தியை பகிரந்து வந்தனர்.
இந்நிலையில், இந்தத் திட்டம் தற்போது சாத்தியக்கூறு ஆய்வில் உள்ளது என்றும், இந்த கட்டத்தில் எந்த அதிகாரப்பூர்வ ஒப்புதலோ அல்லது நிதியோ உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அல் ஷெஹி கூறியுள்ளார். மேலும், திட்டத்தின் வெற்றியைப் பாதிக்கக்கூடிய பல்வேறு காரணிகளை நிவர்த்தி செய்ய முழுமையான பகுப்பாய்வு தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாதை மற்றும் நோக்கங்கள்:
2018ல் முன்மொழியப்பட்ட நீருக்கடியில் ரயில் நெட்வொர்க் திட்டம், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் உட்பட பரந்த பிராந்தியத்தை மையமாகக் கொண்டு, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா இடையே வர்த்தகம் மற்றும் இணைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
இந்தப் பகுதியில் வசிக்கும் சுமார் 1.5 பில்லியன் மக்களுக்கு எளிதான பயணத்திற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக குறிப்பிட்ட அல் ஷெஹி, விமானப் பயணத்திற்கு மாற்றாக ரயில் அமைப்பு மிகவும் வசதியான பயணமாக இருக்கும் என்று முன்மொழிந்துள்ளார். குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு எண்ணெய் கொண்டு செல்வதும், இந்தியாவின் நர்மதா நதியிலிருந்து தண்ணீரை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கொண்டு செல்வதும் இந்தத் திட்டத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகும் என்பதையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
மேக்லேவ் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு:
இத்திட்டம் குறித்து அல் ஷெஹி வெளியிட்டுள்ள விபரங்களின் படி, 1,000 கிமீ/மணி வேகத்தை அடைய இந்த ரயில் ‘maglev’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் என்பதும், இந்த அமைப்பு நீரில் மூழ்கிய கான்கிரீட் சுரங்கப்பாதைகள் வழியாக இயங்கும் மற்றும் நிலைத்தன்மைக்காக அரேபிய கடலின் மேற்பரப்பிற்கு அடியில் 20-30 மீட்டர் நங்கூரமிடப்படும் என்பதும் தெரிய வந்துள்ளது.
பொருளாதார தாக்கம்:
இந்தத் திட்டம் அமீரகம் மற்றும் இந்தியா இரண்டின் தேசிய பொருளாதாரத்திற்கு ஒரு மூலோபாய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், வர்த்தகம், பயணிகள் பயணம் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார உறவுகளை அதிகரிக்கும் என்றும் அல் ஷெஹி வலியுறுத்தியுள்ளார்.
“இந்தத் திட்டத்தின் மூலம், பயணிகள் மற்றும் பொருட்களுக்கு அரேபிய வளைகுடாவிற்கான இந்தியாவின் நுழைவாயிலாக ஐக்கிய அரபு அமீரகம் இருக்கும், மேலும் அமீரகத்தில் பொருளாதாரத்திற்கு ஒரு மூலோபாய மாற்றமாக இத்திட்டம் இருக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீருக்கடியில் ரயில் திட்டம் உலகளாவிய கவனத்தை ஈர்த்திருந்தாலும், அது இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது, இதற்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் மற்றும் சாத்தியக்கூறு ஆய்வுகள் தேவை. இந்த திட்டம் நிறைவேறினால், அமீரகம் மற்றும் இந்தியா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இடையிலான இணைப்பு மற்றும் வர்த்தகத்தில் புரட்சியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகின்றது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel