கடந்த திங்கட்கிழமை (மே 12) இரவு துபாயின் அல் பர்ஷா பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் ஏற்பட்ட எரிவாயு கசிவால் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அந்த கட்டிடத்தில் தங்கியிருந்த குடியிருப்பாளர்களை காலி செய்து தற்காலிகமாக வேறு இடங்களில் தங்க வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பர்ஷா 1, ஹலிம் ஸ்ட்ரீட்டில் உள்ள 13 மாடி அல் ஜரூனி கட்டிடத்தின் தரை தளத்தில் அமைந்துள்ள பேர்ல் வியூ உணவகம் மற்றும் கஃபேயில் ஏற்பட்ட எரிவாயு கசிவால் (Pearl View restaurant and cafeteria) தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, தீ மற்றும் அடர்த்தியான புகை மூன்றாவது தளம் வரை உயர்ந்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த துபாய் சிவில் பாதுகாப்பு (DCD) குழுக்கள் விரைவாக செயல்பட்டு, சிறிது நேரத்தில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக DCD வெளியிட்ட ஒரு அறிக்கையில், “அல் பர்ஷா பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் ஏற்பட்ட எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீயை, சிவில் பாதுகாப்பு குழுக்கள் மிக குறைந்த நேரத்தில் வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டு வந்தன,” என்று உறுதிப்படுத்தியுள்ளது.
இது குறித்து தெரிவிக்கையில் அன்றிரவு 8.40 மணியளவில் பலத்த வெடிப்பு சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து கடும்புகை ஏற்பட்டதாகவும் குடியிருப்பாளர்கள் சம்பவத்தை விவரித்துள்ளனர். பாதிக்கப்பட்ட கட்டிடத்தின் முதல் தளத்தில் வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர், “நாங்கள் உடனடியாக கீழே இறங்கினோம். கட்டிடத்தின் மறுபக்கத்தில் தீ எரிந்தது” என்று கூறியுள்ளார். அங்கிருந்து அவர்கள் வெளியேற்றப்பட்ட பிறகு அருகிலுள்ள ஒரு நண்பருடன் இரவு தங்கும் நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மற்றொரு குடியிருப்பாளர், தனது நண்பர் புகையை சுவாசித்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகப் பகிர்ந்து கொண்டார்.
பக்கத்து கட்டிடமான அல் அன்சாரி கோபுரத்தைச் சேர்ந்த ஒரு சாட்சி, முன்னெச்சரிக்கையாக இரவு 8.45 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மீட்டெடுக்கப்பட்டதாகவும், அதிகாரிகள் விரைவாகச் செயல்பட்டு, கட்டிடத்தைச் சுற்றி பாதுகாப்பு நாடாவை வைத்து கூட்டத்தை கலைக்கத் தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட கட்டிடத்தில் வசிக்கும் மற்றொரு குடியிருப்பாளர், இது ஒரு நிலநடுக்கம் போல எண்ணியதாகவும், கீழே சென்று பார்த்த போது, உடைந்த கண்ணாடி துண்டுகளையும் சில காயமடைந்தவர்களைக் கண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதிர்ஷ்டவசமாக, எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை, மேலும் தீ கீழ் தளங்களுக்கு மட்டுமே பரவியது என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த கட்டிடம் மால் ஆஃப் தி எமிரேட்ஸ் வாகன நிறுத்துமிடப் பகுதியிலிருந்து சில மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மற்றும் கடந்த ஆண்டு டிசம்பரில் தீப்பிடித்த மற்றொரு கட்டமைப்பிற்கு அருகில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தீ விபத்துக்கான காரணம் எரிவாயு கசிவு என அதிகாரத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே இது போன்ற அவசர காலங்களில் அமைதியாக இருக்கவும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் அதிகாரிகள் குடியிருப்பாளர்களை வலியுறுத்தினர். இந்நிலையில் குடியிருப்பு பாதுகாப்பாக இருப்பதாகக் கருதப்பட்டவுடன், தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கான அனுமதிக்காகக் குடியிருப்பாளர்கள் காத்திருக்கின்றனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel