கடந்த வெள்ளிக்கிழமை, அபுதாபியில் உள்ள சையத் சர்வதேச விமான நிலையத்தில் ஒரு பயணியின் குடலில் இருந்து கிட்டத்தட்ட 1.2 கிலோகிராம் எடையுள்ள 89 கோகோயின் (cocaine) காப்ஸ்யூல்களை கண்டுபிடித்து, ஒரு பெரிய போதைப்பொருள் கடத்தல் முயற்சியை முறியடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை மருந்துகள் சுமார் 5 மில்லியன் திர்ஹம்ஸ் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான கூட்டாட்சி ஆணையத்தின் (ICAPC) துறைமுகங்களின் பொது இயக்குநரகத்தால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகின்றது. தென் அமெரிக்க நாட்டிலிருந்து வந்த பயணி ஒருவர் மீது, வழக்கமான சுங்க ஆய்வின் போது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவரது உடலை ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர்.
ஸ்கேன் செய்ததில் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப் பொருட்களின் அறிகுறிகள் கண்டறியப்பட்டன, பின்னர் அவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாகவும், மருத்துவர்கள் அவரது வயிற்றில் இருந்து காப்ஸ்யூல்களை பிரித்தெடுத்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து விமான நிலையத்தில் சுங்கக் குழுவின் விழிப்புணர்வு மற்றும் விரைவான நடவடிக்கைக்காக ஆணையம் குழுவை பாராட்டியதுடன் ஆய்வு முறையை மேம்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டையும் மீண்டும் தெரிவித்துள்ளது. மேலும், ஆய்வு அமைப்பின் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஒரு வாரத்திற்கு முன்பு அதே விமான நிலையத்தில் ஒரு பயணியின் பைகளில் 5 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்தச் சூழ்நிலையில், ஸ்கேனிங் கருவிகள் மூலம் கண்டறியப்பட்ட முறைகேடுகள் முழுமையான ஆய்வுக்கு வழிவகுத்தது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்று போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தும் சமீபத்திய முறைகள் மற்றும் நுட்பங்களை நாட்டின் சுங்கத் துறை அறிந்திருக்கிறது. கடத்தல் வழிகளைத் தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் தொடர்புடைய அதிகாரிகளுடன் தகவல் பரிமாற்றம் மூலம் இந்த விழிப்புணர்வு பராமரிக்கப்படுகிறது.
கூடுதலாக, சுங்க ஆய்வுக் குழுக்கள் மனித உடலில் மறைத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருட்களைக் கண்டறியும் திறன் கொண்ட கதிரியக்க சாதனங்கள் உட்பட மேம்பட்ட உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகின்றது. இந்த முயற்சிகள் சுங்க அதிகாரிகளின் திறன்களை வளர்ப்பதையும் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட வருடாந்திர உத்தியின் ஒரு பகுதியாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel