துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு (DXB) வரும் பயணிகள் இப்போது அவர்களின் பைகளுக்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லாமல் அவர்களின் தங்கும் இடத்திற்கே லக்கேஜ் வழங்கக்கூடிய புதிய சேவையானது தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது அவர்களின் வீடு அல்லது ஹோட்டலுக்கு நேரடியாக லக்கேஜ்களை வழங்கும் இந்த புதிய சேவை பயணிகளுக்கு ஒரு மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.
அதுமட்டுமல்லாமல், புறப்படும் பயணிகள் தங்கள் வீடு, அலுவலகம் அல்லது ஹோட்டலில் இருந்து செய்யக்கூடிய ரிமோட் செக்-இன் வசதியும் உள்ளது. இது விமான நிலையத்தில் நீண்ட வரிசைகளைத் தவிர்த்து, வேகமான, வசதியான விமான நிலைய அனுபவத்தை அனுபவிக்க உதவும். எமிரேட்ஸின் விமான நிலைய சேவைகள் பிரிவான dnataவின் ஒரு பகுதியான மர்ஹாபா (marhaba), dnata கையகப்படுத்திய பேக்கேஜ் தொழில்நுட்பம் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான DUBZ இன் சலுகைகளை ஒருங்கிணைப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தடையற்ற பயணத்திற்கான மூன்று புதிய சேவைகள்
மர்ஹாபா இப்போது அதன் பிராண்டின் கீழ் மூன்று முக்கிய DUBZ சேவைகளை வழங்குகிறது:
- ‘Check-In Anywhere’ இதன் மூலம் பயணிகள் வீடு, ஹோட்டல் அல்லது அலுவலகத்திலிருந்து கூட தங்கள் விமானத்திற்கு செக்-இன் செய்ய அனுமதிக்கிறது. செக்-இன் செய்த பின் போர்டிங் பாஸ்கள் வழங்கப்படுகின்றன, மேலும் லக்கேஜ்கள் ஏஜென்ட்களால் எடுக்கப்பட்டு விமான நிலையத்திற்கு பாதுகாப்பாக டெலிவரி செய்யப்படுகின்றன.
- ‘Land and Leave’ இந்த சேவையில் துபாய் வரும் பயணிகள் தங்கள் லக்கேஜ்களை எடுத்துச் செல்வதைத் தவிர்க்கலாம். தரையிறங்கிய சில மணி நேரங்களுக்குள் அவர்களின் லக்கேஜ்கள் சேகரிக்கப்பட்டு அவர்களின் இடத்திற்கு டெலிவரி செய்யப்படும்.
- ‘Baggage Storage and Delivery’ டிரான்சீட் பயணிகள் அல்லது டடிரான்சிட் பயணிகள் துபாயை சிரமமின்றி சுற்றிப் பார்ப்பவர்களுக்கு இந்த சேவை ஏற்றது. இந்த சேவை குறுகிய மற்றும் நீண்ட கால லக்கேஜ்கள் சேமிப்பை UAE முழுவதும் ஒரே நாளில் டெலிவரி செய்யும் விருப்பங்களை வழங்குகிறது.
பயணிகள் இந்த சேவைகளை marhabaservices.com வழியாக ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம், மேலும் சேமிப்பு மற்றும் டெலிவரி விருப்பங்களும் துபாயில் உள்ள நியமிக்கப்பட்ட சேவை மையங்களில் கிடைக்கின்றன.
dnata இல் UAE விமான நிலைய செயல்பாடுகளுக்கான பிரிவு மூத்த துணைத் தலைவர் ஜாஃபர் தாவூத்தின் கூற்றுப்படி, விமான நிலையங்களில் வேகம் மற்றும் வசதிக்கான வளர்ந்து வரும் தேவைக்கு இந்த ஒருங்கிணைப்பு பதிலளிக்கிறது. “ஒரு குடும்பம் தங்கள் புறப்பாட்டை எளிதாக்குவதாக இருந்தாலும் சரி அல்லது ஒரு வணிக பயணி தனது நேரத்தை மிச்சப்படுத்துவதாக இருந்தாலும் சரி, தடையற்ற விமான நிலைய அனுபவத்தை வழங்கும். இது சிரமத்தை நீக்கி மக்களுக்கு நேரத்தையும் மன அமைதியையும் வழங்குவதாகும்” என்று தாவூத் கூறியுள்ளார்.
சமீபத்திய IATA உலகளாவிய பயணிகள் கணக்கெடுப்பின்படி, உலகெங்கிலும் உள்ள பயணிகளிடையே விமான நிலையங்களில் வேகம் மற்றும் வசதி முதன்மையான முன்னுரிமையாக உள்ளது. இது குறித்து பதிலளித்தவர்களில் 70% பேர் வரிசைகளைத் தவிர்க்க முன்கூட்டியே லக்கேஜ்களை செக்-இன் செய்ய விரும்புவதாகக் கூறியுள்ளனர்.
dnata-வால் கையகப்படுத்தப்பட்டதிலிருந்து, DUBZ நிலையான வளர்ச்சியைக் கண்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் மட்டும், இது 70,000 க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு சேவை செய்தது, இது ஆண்டுக்கு ஆண்டு 15% அதிகரிப்பை பிரதிபலிக்கிறது. இந்த சேவை குறிப்பாக குடும்பங்கள், வணிக பயணிகள் மற்றும் பிரீமியம் பயணிகளிடையே பிரபலமானது குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel