துபாயில் பணிபுரியும் குறிப்பிட்ட செவிலியர்களுக்கு கோல்டன் விசா வழங்கவிருப்பதாக அறிவிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. துபாய் சுகாதார துறையில் (Dubai Health) பணிபுரியும் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய செவிலியர்கள் இப்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசாவிற்கு தகுதி பெறுவார்கள் என்று துபாய் அறிவித்துள்ளது. துபாயின் பட்டத்து இளவரசரும், துணைப் பிரதமரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் உத்தரவின் பேரில், சுகாதார நிபுணர்களின் பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (மே 12, திங்கள்கிழமை) உலகளவில் அனுசரிக்கப்படும் சர்வதேச செவிலியர் தினத்தையொட்டி இந்த முயற்சி வெளியிடப்பட்டது. இது ஆரோக்கியமான, மிகவும் நெகிழ்ச்சியான சமூகத்தை வடிவமைப்பதில் செவிலியர்களின் முக்கிய பங்கை எமிரேட் அங்கீகரிப்பதை பிரதிபலிக்கிறது.
ஷேக் ஹம்தான், நோயாளி பராமரிப்பு மற்றும் மற்றவர்களின் நல்வாழ்வுக்கான செவிலியர்களின் சிறந்த அர்ப்பணிப்பைப் பாராட்டியதுடன், சுகாதார சேவைகளின் ஒட்டுமொத்த தரத்தை மேம்படுத்துவதில் அவர்களின் முக்கிய பங்கையும் எடுத்துக்காட்டினார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “செவிலியர்கள் எங்கள் சுகாதார அமைப்பின் முன்னணியில் உள்ளனர் மற்றும் ஆரோக்கியமான, செழிப்பான சமூகத்தை உருவாக்குவதில் அத்தியாவசிய பங்காளிகள்” என்று கூறியுள்ளார். மேலும், “துபாய் அவர்களின் சிறப்பை மதிக்கிறது மற்றும் இரக்கம், அர்ப்பணிப்புடன் சேவை செய்பவர்களை அங்கீகரிப்பதில் பெருமை கொள்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய துறைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட துபாய் அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளில் இது சமீபத்திய நடவடிக்கையாகும். முன்னதாக, நவம்பர் 2021-இல், ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னணி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு கோல்டன் விசா அறிவிக்கப்பட்டது. அத்துடன் சமீபத்தில், துபாய் சிறந்த தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் கோல்டன் விசாக்களை வழங்கத் தொடங்கியது, இதை அக்டோபர் 5, 2024 அன்று உலக ஆசிரியர் தினத்தன்று ஷேக் ஹம்தான் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நீண்ட காலமாகப் பணியாற்றும் செவிலியர்களுக்கான கோல்டன் விசா முயற்சி, சமூக மேம்பாடு மற்றும் பொது நல்வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் நிபுணர்களை அங்கீகரித்து ஆதரிப்பதில் எமிரேட்டின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel