துபாய் சுங்கத்துறையானது, போலியான பொருட்கள் பயன்பாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு பெரிய முயற்சியின் ஒரு பகுதியாக, 2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 42.2 மில்லியன் திர்ஹம் மதிப்புள்ள போலிப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. முன்னதாக 2024 ஆம் ஆண்டில், 92.7 மில்லியன் திர்ஹம் மதிப்புள்ள பொருட்கள் சம்பந்தப்பட்ட 285 இதேபோன்ற வழக்குகள் பதிவாகியதாகவும் ஆணையம் அறிவித்துள்ளது.
துபாய் சுங்கத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கடிகாரங்கள், கண்ணாடிகள், ஆடைகள், துணிகள், ஹேண்ட்பேக் மற்றும் காலணிகள் ஆகியவற்றின் போலியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. இத்தகைய அமலாக்க நடவடிக்கைகளுக்கு துபாய் சுங்கத்துறை கல்வி மற்றும் பயிற்சியிலும் கவனம் செலுத்தியுள்ளது. அதில் 31 ஆய்வாளர்களுக்கு பயிற்சி அளிக்க சட்ட நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உள்ளூர் சந்தையில் உலகளவில் பிரபலமான பிராண்டுகளின் போலிப் பொருட்கள் நுழைவதைத் தடுப்பதற்கான முயற்சிகளில் பிற அரசு நிறுவனங்கள் மற்றும் டிரேட் மார்க் உரிமையாளர்களுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருவதாக துபாய் சுங்கத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
போலிப் பொருட்களைக் கையாள்வதற்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் வலுவான சட்டங்கள் உள்ளன. டிரேட் மார்க் தொடர்பான 2021 ஆம் ஆண்டின் 36 ஆம் எண் கூட்டாட்சி ஆணை சட்டத்தின் பிரிவு 49 இன் கீழ், அமீரகத்தில் போலி டிரேட் மார்க்குகளை உருவாக்குதல் அல்லது பயன்படுத்துதல் ஆகியவற்றில் பிடிபட்டால் 100,000 திர்ஹம் முதல் 1 மில்லியன் திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படலாம். அத்துடன் சிறைத்தண்டனை, போலி பொருட்களை அழித்தல், பறிமுதல் மற்றும் நாடுகடத்தல் என நீதிமன்ற தீர்ப்பின் படி தண்டனை வழங்கப்படலாம்.
இது போலி பொருட்களை தெரிந்தே விற்பனை செய்பவர்கள், இறக்குமதி செய்பவர்கள் அல்லது ஏற்றுமதி செய்பவர்கள் ஆகியவர்களுக்கு இந்த சட்டம் பொருந்தும். எனவே, குற்றம் சாட்டப்பட்டவர், பொருட்களின் போலி தன்மை குறித்து தங்களுக்குத் தெரியாததற்கான ஆதாரங்களை வழங்குவது அல்லது ஏற்றுமதியாளருக்கு தெரிவிப்பது குற்றம் சுமத்தப்பட்டவரின் பொறுப்பாகும்.
பல்வேறு நாட்டவர்கள் வசிக்கும் துபாயில் போலி பொருட்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதனை தடுக்க கடுமையான அமலாக்கம், சிறந்த பயிற்சி மற்றும் கடுமையான தண்டனைகள் மூலம் போலி பொருட்களுக்கு எதிரான தனது முயற்சியை துபாய் அரசு முன்னெடுத்து வருகிறது. இதன் நோக்கம் நுகர்வோர், நேர்மையான வணிகங்கள் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் போலி பொருட்களால் ஏற்படும் தீங்கிலிருந்து பாதுகாப்பதாகும் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel