துபாயில் வசிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த 33 வயதான ஆனந்த் பெருமாள்சாமி (Ananth Perumalsamy) என்பவர், சமீபத்திய UAE லாட்டரியில் 1 மில்லியன் திர்ஹம்ஸ் கிராண்ட் பரிசை வென்ற வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தனியார் நிறுவனத்தில் அக்கௌன்டன்ட்டாக பணிபுரிந்து வரும் இவர், 2017 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருகின்றார்.
ஆனந்த் 11 நண்பர்களுடன் சேர்ந்து டிக்கெட்டுகளை வாங்கி வந்த நிலையில், தற்பொழுது இந்த ஜாக்பாட் பரிசு கிடைத்துள்ளது. எனவே, பரிசுத் தொகை 12 உறுப்பினர்களிடையே பிரிக்கப்படும் மற்றும் ஒவ்வொரு உறுப்பினரும் 85,000 திர்ஹம் முதல் 100,000 திர்ஹம் வரை பணம் எடுத்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகாசியை பூர்வீகமாகக் கொண்ட ஆனந்த், தினசரி விரும்பிக் குடிக்கும் டீயை தியாகம் செய்து பணத்தை மிச்சப்படுத்தி லாட்டரிச் சீட்டுகளை வாங்கியதாகவும், ஒரு சிறிய தியாகம் இவ்வளவு பெரிய வெகுமதியைத் தரும் என்று தான் ஒருபோதும் நினைத்ததில்லை என்றும் கூறியுள்ளார்.
நீண்டகாலமாக அமீரகத்தில் இருந்து குறைந்த சம்பளம் வாங்கும் இந்த குழு, கடந்த ஆண்டு நவம்பரில் லாட்டரி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஒவ்வொரு டிராவிலும் பங்கேற்று வருகிறது. ஒவ்வொரு டிக்கெட்டும் 50 திர்ஹம் செலவாகும். ஒவ்வொரு உறுப்பினரும் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை 8 திர்ஹம் பங்களித்துள்ளனர். இது ஒரு மாதத்திற்கு திர்ஹம் 16 மட்டுமே, இது சுமார் 12 முதல் 16 கப் டீ குடிப்பதைத் தவிர்ப்பதற்கு சமம் என்று ஆனந்த் கூறியுள்ளார்.
இந்நிலையில் அவர்களின் டிக்கெட்டுகளில் ஒன்றுக்கு 1 மில்லியன் திர்ஹம் பரிசு கிடைத்துள்ளது. தனது மொபைலில் லாட்டரி செயலியை சரிபார்த்த பிறகு, நள்ளிரவில் முதலில் வெற்றியை கண்டதாகத் தெரிவிக்கும் ஆனந்த், இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொண்டபோது, ஆரம்பத்தில், அவரது குழுவினர் நம்பவில்லை என்றும், பின்னர் உண்மை என்று தெரிய வந்தவுடன் மகிழ்ச்சியில் கொண்டாடியதாகவும் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், “அந்த இரவும் அடுத்த இரவும் என்னால் தூங்க முடியவில்லை. நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன்” என்று மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் ஆனந்த், பரிசுத் தொகையை திருமணத்திற்கு செலவிடப்போவதாகவும், ஒரு கார் வாங்கி துபாயில் ஓட்ட வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற பயன்படுத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
அவரைப் போலவே, குழுவில் உள்ள மற்றவர்களுக்கும் வீடு கட்டுதல், கடன்களை அடைத்தல், குழந்தைகளின் கல்விக்கு செலவழித்தல் அல்லது சிறு தொழில்களைத் தொடங்குதல் என அவர்களின் சொந்த இலக்குகளை அடைய ரொக்கத் தொகையை பயன்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel