ADVERTISEMENT

தேரா துபாயில் இரட்டிப்பாகும் தனியார் பார்க்கிங் கட்டணம்: விரக்தியில் குடியிருப்பாளர்கள்…!!

Published: 6 May 2025, 7:43 PM |
Updated: 6 May 2025, 7:43 PM |
Posted By: Menaka

துபாயின் தேராவில் உள்ள வாகன ஓட்டிகள், குடியிருப்பாளர்கள் மற்றும் வணிக உரிமையாளர்கள் தனியார் பார்க்கிங் கட்டணங்கள் கடுமையாக உயர்ந்து வருவது குறித்து தங்களின் கவலைகளை வெளிப்படுத்தயுள்ளனர். அதாவது சில தனியார் பார்க்கிங் இடங்களில் இப்போது ஒரு மணி நேரத்திற்கு 15 திர்ஹம் முதல் 35 திர்ஹம் வரை வசூலிக்கப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

ADVERTISEMENT

துபாயின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றான தேராவின் முக்கிய பகுதிகளில், மற்ற இடங்களை போன்று பொது பார்க்கிங் வசதிகள் அதிகம் இல்லை. இதனால் இப்பகுதிகளில் வணிகம் செய்பவர்கள், வசிப்பவர்கள் மற்றும் ஷாப்பிங் வருபவர்கள் என பலரும் தனியார் பார்க்கிங் இடங்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் இந்த கட்டண அதிகரிப்பு குடியிருப்பாளர்களுக்கு விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.

அல் ராஸில் செயல்படும் அரிசி வியாபாரி ஹமீத் ஹாஷிம், தனியார் பார்க்கிங்கிற்கு ஒரு நாளைக்கு 20 திர்ஹம் செலுத்தி வந்ததாகவும், ஆனால் இந்த மாதம் கட்டணம் ஒரு நாளைக்கு 40 திர்ஹம் ஆக உயர்ந்தபோது அதிர்ச்சியடைந்ததாகவும் கூறியுள்ளார். அத்துடன் தற்போது மாதாந்திர பாஸுக்கு 650 திர்ஹம் கேட்கிறார்கள் என்றும் தனது வேதனையை தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

தனியார் பார்க்கிங் இடங்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயம்

இது தேரா முழுவதும் உள்ள வர்த்தகர்கள், பயணிகள் மற்றும் வாடிக்கையாளர்களைப் பாதிக்கும் ஒரு பரந்த பிரச்சினையின் ஒரு பகுதியாகும். RTAவின் பொது பார்க்கிங் மண்டலங்கள் பெரும்பாலும் நிரம்பி இருப்பதால், ஓட்டுநர்கள் விலையுயர்ந்த தனியார் பார்க்கிங் இடங்களைத் தேட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

கூடுதலாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பார்க்கிங் இடத்தைத் தேடி பிடிக்க வேண்டியிருப்பதால், இது வாகன ஓட்டிகளுக்கு விரக்தியை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், தேவையற்ற எரிபொருள் நுகர்வு மற்றும் போக்குவரத்து நெரிசலுக்கும் வழிவகுக்கிறது. இதனால் பெரும்பாலானோர் தனியார் பார்க்கிங்கை பயன்படுத்துகின்றனர்.

ADVERTISEMENT

இது ஒருபுறம் இருக்க, தனியார் பார்க்கிங் இடங்களில் நெகிழ்வுத்தன்மை இல்லாமல் அதிக கட்டணங்களை வசூலிப்பதும் வாகன ஓட்டிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்துகிறது. அங்கு ஒரு நிமிடம் தாமதமானாலும் கூடுதல் மணிநேர கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, அதைக் கேள்வி கேட்டால், உதவியாளர்கள் ஆக்ரோஷமாக நடந்து கொள்வதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.

இப்படியான சூழ்நிலையில், குடியிருப்பாளர்கள் அதிகாரிகளை இதில் ஈடுபட வலியுறுத்துகின்றனர். குடியிருப்பு வாடகையைப் போலல்லாமல், பார்க்கிங் கட்டணம் கட்டுப்பாடற்றதாகவே உள்ளது, இது தனியார் ஆபரேட்டர்களுக்கு வாகன ஓட்டிகளிடம் பணத்தை சுரண்டுவதற்கு சுதந்திரமாக உதவுகிறது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஏனெனில், அரசு தரப்பில் எந்தவொரு மேற்பார்வையும் இங்கு இல்லை என்பதால், அவர்களே விலைகளை நிர்ணயிப்பதுடன், அதனை அவர்களிடம் கேள்வி கேட்டால், மிரட்டுவதாகவும் வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். இது தேரா பகுதியில் வேலை செய்ய, ஷாப்பிங் செய்ய அல்லது பார்வையிட இங்கு வரும் அனைவரையும் பெரிதும் பாதிக்கிறது என்றும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel